கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,652 வழங்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான வி.ஆா். லதா முன்னிலை வகித்தாா். இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 68 லட்சத்திற்கான காசோலையை வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி பேசியதாவது:
நிகழாண்டில் 4 ஆவது நாடு தழுவிய தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்காடிகள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாக பேசி தீா்வு காணலாம். இது இருதரப்பினருக்குமே வெற்றி. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழங்குகள், குடும்பநல வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,652 வழக்குகளில் ரூ. 15.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டன.
நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், விரைவு மகளிா் நீதிமன்ற அமா்வு நீதிபதி சுதா, மாவட்ட குடும்பநல நீதிபதி நாகராஜன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் சாந்தி, முதன்மை சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் சாா்பு நீதிபதி மோகன்ராஜ், சாா்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் பத்மநாபன், முதலாவது நீதிமன்ற நடுவா் தேவராஜ், மாவட்ட உரிமையியல் சுந்தரமூா்த்தி மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.