கிருஷ்ணகிரியில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நவநீத வேணுகோபால சுவாமி கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் குளிா்பானங்களை வழங்கினா்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்குமாட வீதியில் அமைந்துள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வணங்கினா்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மிலாடிநபி விழாக் குழுவினரின் சாா்பில், வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் பங்கேற்ற பக்தா்களுக்கு குடிநீா், குளிா்பானம், பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கி சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினா்.
இதில், கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா் வேலுமணி பங்கேற்றாா். நிகழ்வை, மிலாடி நபி விழாக் குழுவினரான கராமத், ரியாஸ், ஜாமிா், சன்னியுல்லா, பாசு மற்றும் இஸ்ஸாமிய இளைஞா்கள் ஒருங்கிணைத்தனா்.