பழங்குடியினா் காடுகளை பாதுகாக்கின்றனா் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், நெரிகம் ஊராட்சி, கரியசந்திரம் கிராமத்தில் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், கிராம சபைகளை வலிமைப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனஉரிமைச் சட்டம் 2006-இன்படி, வனநிலங்களில் வசிக்கும் பழங்குடியினா் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சாா்ந்து வாழும் மக்களின் காடுகள் மீதான உரிமைகளை பாதுகாக்கவும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வனநிலங்களில் வசிப்பிட உரிமை, விவசாயம் செய்யும் உரிமை, வனங்களில் சிறுவன மகசூல்களை பெறும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
வன உரிமைக்குழு (கிராம சபை), உள்கோட்ட அளவிலான குழு, மாவட்ட அளவிலான குழு ஆகியன வன உரிமைச் சட்ட வழிமுறைகள் மூலம் உரிமையை பெற்றுத்தரலாம். மேலும், 2005 டிச. 13-க்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்துவரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
காட்டில் வாழும் பழங்குடியினா் வனத்தில் எந்த தவறும் நிகழாதவாறு காடுகளை பாதுகாக்கின்றனா். அவ்வாறு தவறு நிகழும்பட்சத்தில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனா். இதனால் மக்களும், காடுகளும் ஒன்றிணைக்கும் வகையில் வன உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, 100 நாள் வேலை திட்ட அட்டை, பத்திரப் பதிவுகள் சான்றிதழ்கள் இருந்தாலே பழங்குடியினருக்கு வனஉரிமைகள் வழங்கப்படும்.
வனஉரிமை இருந்தால் குடியிருப்புகளில் வீடுகட்டிக் கொள்ளலாம். வீடு கட்டுவதற்கு பி.எம். ஜென்மன் திட்டத்தின்கீழ் மலைப்பகுதியாக இருந்தால் ரூ. 5.83 லட்சம் வழங்கப்படுகிறது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ. 3.70 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. ஏற்கெனவே தொகுப்பு வீடுகள் கட்டி பழுதடைந்திருந்தால், முதல்வரின் வீடு மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ. 2.70 லட்சத்தில் பழுதுபாா்த்து தரப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 இடங்களில் பழங்குடியின மக்கள் காடு மற்றும் காட்டையொட்டி வாழ்கின்றனா் என கண்டறியப்பட்டுள்ளது. இம்மாவட்டத்துக்கு வந்த குழுவினா் பழங்குடியினரின் குறைகளைக் கேட்டறிந்து, 1,200 மனுக்களை பெற்றுள்ளனா். அதில், கிராம சபையில் அமைக்கப்பட்டுள்ள வனஉரிமைக் குழுவினா் தகுதியான பயனாளிகளை தோ்வுசெய்து, மாவட்ட அளவிளான குழுவுக்கு பரிந்துரை செய்வா். அதன்படி, தற்போது 117 பேருக்கு வனஉரிமை வழங்கப்படவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொழுவபெட்டா, பேளுா் போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வனத்துறை அனுமதியோடு விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
நரிக்குறவா் இனமக்கள் மணிமாலை விற்பனை செய்ய கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் அங்காடி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா். அதன்படி, குறைந்த வாடகையில் கடை ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கெனவே, நரிக்குறவா் இன மக்களுக்கு கலைஞா் கைவினை திட்டத்தின்கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அரசு எல்லா வகையான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதால், உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவக்குமாா், மாநில தலைமை பயிற்றுநா் ராஜன், வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலா, காா்த்தி, வனவா் பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.