ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி பகுதியில் பிப். 9-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் (ஒசூா் - திட்ட பராமரிப்பு கோட்டம்) சுந்தரபாண்டியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம், ஒசூரின் கீழ் பராமரித்துவரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் (ம) புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 844) ராயக்கோட்டை அருகே சாலைப் பணியின்போது புதிதாக பதிக்கப்பட்ட 850 எம்எம், எம்எஸ் குழாய்களை, ஏற்கெனவே குடிநீா் வழங்கும் குழாயில் ஒன்றொடு ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ளவேண்டி இருப்பதால் பிப்.9 முதல் பிப்.11-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மட்டும் ஒசூா் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள், தளியில் 50 , ஒசூரில் 26, சூளகிரியில் 42, வேப்பனப்பள்ளியில் 27 ஊராட்சிகளில் உள்ள 1,766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க இயலாது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் இந்த மூன்று நாள்களுக்கு உள்ளுா் நீா் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.