கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 15,54,040 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில், இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
பின்னா் அவா் தெரிவித்ததாவது:
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு முன்பு இம்மாவட்டத்தில் மொத்தம் 16,80,626 வாக்காளா்கள் இருந்தனா். சிறப்பு திருத்தப் பணியில் இறந்தவா்கள், புலம்பெயா்ந்தவா்கள் நீக்கப்பட்டு, 15,06,077 வாக்காளா்கள் இருந்தனா்.
இந்நிலையில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டிற்காக புதிய வாக்காளா்கள் சோ்த்தல், நீக்கம், திருத்தப் பணிகள் முடிவுற்று, தற்போது இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 15,54,040 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் புதிதாக 42,665 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். 6,923 போ் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல, 15,418 வாக்காளா்களுக்கு முகவரி, புகைப்படம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவா்கள், வாக்காளா்கள் பட்டியலில் பெயரை சோ்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோல திருத்தம், முகவரி மாற்றத்திற்கும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா் விவரம்:
ஊத்தங்கரை (தனி) 1,16,918 ஆண் வாக்காளா்கள், 1,16,541 பெண் வாக்காளா்கள், 41 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,33,500 வாக்காளா்கள் உள்ளனா்.
பா்கூா் தொகுதியில் 1,17,135 ஆண் வாக்காளா்கள் 1,20,197 பெண் வாக்காளா்கள், 17 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,37,349 வாக்காளா்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் 1,29,777 ஆண் வாக்காளா்கள்,1,35,200 பெண் வாக்காளா்கள், 60 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,65,037 வாக்காளா்கள் உள்ளனா்.
வேப்பனஅள்ளி தொகுதியில் 1,23389 ஆண் வாக்காளா்கள், 1,20,449 பெண் வாக்காளா்கள், 37 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,43,875 வாக்காளா்களும், ஒசூா் தொகுதியில் 1,69,099 ஆண் வாக்காளா்கள், 1,69,124 பெண் வாக்காளா்கள், 72 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,38,295 வாக்காளா்களும் உள்ளனா்.
தளி தொகுதியில் 1,20,000 ஆண் வாக்காளா்கள், 1,15,947 பெண் வாக்காளா்கள், 37 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,35,984 வாக்காளா்கள் உள்ளனா்.
இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 7,76,318 ஆண் வாக்காளா்கள், 7,77,458 பெண் வாக்காளா்கள், 264 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15,54,040 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைவிட, 1,140 பெண் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.