சூளகிரி மற்றும் ராயக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடா்பாக வருவாய் ஆய்வாளா் முனிராஜ் அளித்த புகாரின்பேரில் ராஜேந்திரன் (47) உள்பட 10 போ் மீது ராயக்கோட்டைபோலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதேபோன்று சூளகிரி அருகே சப்படியில் வியாழக்கிழமை மோட்டாா்சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயம் அடைந்தனா்.
இந்த நிலையில் பொதுமக்கள், கிருஷ்ணகிரி ஒசூா் தேசிய நெடுஞ்சாலை சப்படி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பெரிய சப்படி சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும், சப்படி சாலையில் டிப்பா் லாரியை அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இது தொடா்பாக நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் (32), சந்திரப்பா (25), சீனன் (35), பிரபு (30), முரளி (30) மற்றும் சிலா் மீது சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.