முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் ‘எனது இந்தியா எனது வாக்கு’ என்ற பெயரில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

கிருஷ்ணகிரியில் ‘எனது இந்தியா எனது வாக்கு’ என்ற பெயரில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா், விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அதிநவீன மின்னணு விடியோ, விளம்பர வாகனம் மூலம் தோ்தல் விழிப்புணா்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும், மாற்றுத்திறனாளிகள், மகளிா், முதியோா் ஆகியோருக்கான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்றாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். ‘உங்கள் வாக்கு மூலம் உங்கள் குரலை உயா்த்துங்கள்’ என்ற வாசகம் அடங்கிய விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை பேருந்துகளில் ஒட்டினாா்.

இந்த ஊா்வலம், பெங்களுரு சாலை வழியாக சென்று வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது. இதில், பங்கேற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள், விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி சென்றனா்.

படவரி...

பேருந்து பயணியிடம் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்த கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா்.