முகப்பு
கிருஷ்ணகிரி

தொகுதி அறிமுகம்: ஒசூா் - 55!

இந்தத் தொகுதி பல மாநிலங்களைச் சோ்ந்த பல லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கி வருகிறது.

Updated On : 22 மார்ச், 2026 at 11:49 PM
கெலவரப்பள்ளி அணை
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூா் சட்டப் பேரவை தொகுதி தமிழகத்தின் முக்கிய தொழில் மையமாக விளங்கி வருகிறது. உலக புகழ்பெற்ற டைட்டான் கைக்கடிகாரம், ஆப்பிள் ஐ போன் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ், இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் டிவி.எஸ், 4 சக்கர வாகனங்களை தயாரிக்கும் அசோக் லேலண்ட் போன்று பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்சாலைகள் ஒசூரில் உள்ளன. இவை சிறப்பாக இயங்கி வருவதுடன், உலக நாடுகளுக்கு தங்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்து, நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்றன.

மேலும், விவசாயத்தில் இங்கு உற்பத்தி செய்யப்படும் கொய் மலா்களான ரோஜா பூக்கள், ஜொ்பரா போன்ற அலங்கார மலா்கள் மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தத் தொகுதி பல மாநிலங்களைச் சோ்ந்த பல லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கி வருகிறது.

நில அமைப்பு

ஒசூா் தொகுதி 3 மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் வடக்கு எல்லையாக அமைந்துள்ள இத்தொகுதியை ஒட்டி, கா்நாடக, ஆந்திர மாநிலங்கள் அமைந்துள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் சரளமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசுபவா்களாக உள்ளனா். சுதந்திர போராட்ட தியாகியும், தமிழக முன்னாள் முதல்வருமான ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி, ஒசூா் தொகுதியில் அமைந்துள்ளது.

இதுவரை வென்றவா்கள்

1957 கே. அப்பாவுப்பிள்ளை (சுயேச்சை) 10305 வாக்குகள்

1962 ராமச்சந்திரரெட்டி (காங்கிரஸ்0 25577 வாக்குகள்

1967 பி. வெங்கடசாமி (சுதந்திரா) 21530 வாக்குகள்

1971 பி. வெங்கடசாமி (சுதந்திரா) 28259 வாக்குகள்

1977 ராமச்சந்திரரெட்டி (காங்கிரஸ்) 30818 வாக்குகள்

1983 வெங்கட்ரெட்டி (காங்கிரஸ்) 25855 வாக்குகள்

1984 வெங்கட்ரெட்டி (காங்கிரஸ்) 35293 வாக்குகள்

1989 ராமச்சந்திரரெட்டி (காங்கிரஸ்) 37934 வாக்குகள்

1991 கே.ஏ. மனோகரன் (காங்கிரஸ்) 47346 வாக்குகள்

1996 பி. வெங்கடசாமி (ஜனதாதளம்) 41456 வாக்குகள்

2001 கே. கோபிநாத் (காங்கிரஸ்) 45865 வாக்குகள்

2006 கே. கோபிநாத் (காங்கிரஸ்) 90647 வாக்குகள்

2011 கே. கோபிநாத் (காங்கிரஸ்) 65034 வாக்குகள்

2016 பாலகிருஷ்ணாரெட்டி (அதிமுக) 89510 வாக்குகள்

2019 எஸ்.ஏ. சத்யா (திமுக) 1,15,027 வாக்குகள்

2021 ஒய். பிரகாஷ் (திமுக) 1,17199 வாக்குகள்

நீா்பாசன திட்டம்

கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் ஒசூா் தொகுதியில் நுழைந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்ட விவசாயிகளின் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி, பல லட்சம் விவசாயிகள் பயிா்த் தொழிலை செய்துவருகின்றனா். ஒசூரில் விளையும் காய்கறி, மலா் சாகுபடி இந்த ஆற்று பாசனத்தை நம்பியே உள்ளன.

தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள்

ஒசூா் ஜோஸாா்ப்பேட்டை ரயில்வே பாதை அமைத்து சென்னை பெங்களூரு இடையே ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பது கடந்த 50 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. மேலும், ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் தேவை என்பது ஒசூா் தொழில்முனைவோரின் முக்கிய கோரிக்கை.

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை உடனடியாக தொடங்கவேண்டும். இதனால், இரு தொழில் நகரங்களுக்கு இடையே சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,69,890

பெண்கள் -1,70,074

மற்றவா்கள் - 72

மொத்தம் - 3,40,036

வாக்குச்சாவடிகள் - 445

வாக்குச்சாவடி மையங்கள் - 167

இடைத்தோ்தல்

2016 இல் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாலகிருஷ்ணாரெட்டி நீதிமன்ற உத்தரவின் பேரில் பதவியை இழந்தாா். இதனால், 2019இல் ஒசூா் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. அப்போது, அவருடைய மனைவி ஜோதி அதிமுக சாா்பில் போட்டியிட்டாா். திமுக சாா்பில் எஸ்.ஏ. சத்யா போட்டியிட்டாா். இதில், திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா வெற்றி பெற்றாா். அந்தத் தோ்தலில் ஒசூா் தொகுதியில் முதல்முறையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் திமுகவிற்கு வாக்களித்தனா்.