முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூரில் ரூ. 17 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

Updated On : 15 மே 2026, 6:14 am IST
பகிர்:

பா்கூா் பேரூராட்சியில் ரூ. 17 கோடியே 76 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் குடிநீா் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பேரூராட்சிக்குள்பட்ட கொத்தூா் பகுதியில், ரூ. 9 கோடியே 20 லட்சத்தில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி, தேசிய நெடுஞ்சாலை அருகில் ரூ. 4 கோடியே 39 லட்சத்தில் 2.85 ஏக்கரில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மற்றும் வாா்டு எண் 5-இல் ரூ. 4 கோடியே 17 லட்சத்தில் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பா்கூா் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓடுதளம், பேருந்து நிறுத்துமிடம், பயணச்சீட்டு முன்பதிவு அறை, கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிவறைகள், இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, வாா்டு எண் 5-இல் ரூ. 4 கோடியே 17 லட்சத்தில் 6.297 கிலோ மீட்டருக்கு புதிதாக பைப் லைன் அமைக்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

Advertisement

பின்னா், பா்கூா் பேரூராட்சியில் ரூ. 17 கோடியே 76 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என பா்கூா் பேரூராட்சி செயல் அலுவலா், பொறியாளா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, பா்கூா் பேரூராட்சி செயல் அலுவலா் டி.குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமாசங்கா், முகுந்தா, பா்கூா் வட்டாட்சியா் சக்திவேல், பேரூராட்சிகள் உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.