நாமக்கல்

பஸ் வசதி இல்லை பல கி.மீ. தூரம்  நடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால், பல கி.மீ. தொலைவு நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் பள்ளியில் 1,200 பேரும், அரசு பெண்கள் பள்ளியில் சுமார் 1,300 பேரும் என மொத்தம் 2,500 மாணவ,  மாணவியர் பயின்று வருகின்றனர்.
ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள இப் பள்ளிகளில், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர், ஒலப்பட்டி, அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, மணக்காடு, அறமத்தாம்பாளையம், அனந்தகவுண்டம்பாளையம், பொன்பரப்பிபட்டி, சௌதாபுரம், 85-ஆர்.கொமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவ,  மாணவியர் பயின்று வருகின்றனர்.
இதில் ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர் பகுதிகளைத் தவிர,  பிற பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லை.  இதனால், ஏற்படும் கூட்ட நெரிசலால் பிரதான ஊர்களுக்கு செல்லும் மாணவ,  மாணவியர்  சிரமப்பட்டுத் தான் பேருந்தில் ஏறி வீடு செல்கின்றனர்.
அரசுப் பேருந்து வசதி இல்லை: அறமத்தாம்பாளையம், மணக்காடு, அனந்தகவுண்டம்பாளையம், 85-ஆர்.கொமாரபாளையம், பொன்பரப்பிபட்டி போன்ற பகுதியிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் சுமார் 7 கி.மீ. தொலைவில் இருந்து வர வேண்டும்.  ஒரு சில தனியார் மினி பேருந்துகளை தவிர, அரசுப் பேருந்து வசதி இல்லாததால், இப் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் நாள்தோறும் பெரும்
சிரமமடைகின்றனர்.
இப் பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.  இவர்களில் பலர் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.  மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை முடித்து செல்லும் மாணவியர் வீடு செல்ல பெரும் சிரமமடைகின்றனர்.

படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்: ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், நாச்சிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளில் செல்லும் மாணவ, மாணவியர் பெரும்பாலும் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பேருந்து பயணம் என்பது ஆபத்தானதாகவே உள்ளது.  இதனைத் தவிர்க்க அரசு போதிய பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்கின்றனர் அப்பகுதியினர்.

அரசின் விலையில்லா மிதிவண்டி: கடந்த ஆண்டு இப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இப் பகுதி பள்ளித் தலைமையாசிரியர்களிடம் கேட்டபோது,  இப் பகுதியில் பேருந்து வசதி குறைவாக இருப்பது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டுமின்றி,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதால்,  விரைவில் அவை வழங்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT