நாமக்கல் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ள விவேகானந்தா கல்லூரியில்
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ள விவேகானந்தா கல்லூரியில் கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு.ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தல் நிகழாண்டில் நடைபெறவுள்ளது. நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளன.
இந்த மையங்களில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்தி குமார்பதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.தேவிகா ராணி, கலால் உதவி ஆணையர் மு.இலாஹிஜான், டிஎஸ்பி சண்முகம் மற்றும் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி வட்டாட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.