சென்னை: கோயம்பேட்டில் மதுபான விடுதியில் தகராறு - இலங்கைத் தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை!
மதுபான விடுதியில் இரு தரப்புக்கு இடையே தகராறு - கோபத்தில் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண்!
சென்னை : சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான விடுதியொன்றில் மது அருந்திவிட்டு நடனம் ஆடும்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சம்பந்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் விடுதிக்கு வெளியே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி(18) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில், தோழியைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை(மே 30) சென்னை வந்தடைந்தார்.
சென்னையில் தமது நண்பர்களைச் சந்தித்து விட்டு அவர்களுடன் இரவு கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றாராம். அவர்கள் அனைவரும் அங்கு மது அருந்திவிட்டு நடனம் ஆடிக் கொண்டிருந்துள்ளனர்.
Advertisement
Advertisement
அப்போது இவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் விடுதி பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பினர். இந்த நிலையில், மீண்டும் இரு தரப்பினரும் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனராம்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. அதன்பின், அங்கு சண்டையிட்டவர்களில் ஒரு தரப்பினர் திமுக கொடி கட்டிய காரில் சென்றனர். யான்சி உட்பட அவரது நண்பர்கள் மூன்று இருசக்கர வாகனங்களில் சென்றனர்.
இந்த நிலையில்,கோபத்தில் காரை வேகமாக காரை இயக்கிய இருதரப்பு, தமக்கு முன்னால் யான்சி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது இடித்ததில், யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் சென்ற இன்னொரு சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவு இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு போலீசார் யான்சி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோயம்பேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையை தொடக்கி உள்ளனர்.
திமுக கொடிகட்டிய காரை வேகமாக இயக்கி வேண்டுமென்று விபத்தை ஏற்படுத்திய நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும் ஒரு நபரைப் பிடித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்திய போது, அந்தக் கார் சுமன் சக்திவேல் என்பவருடையது என தெரிய வந்தது.
மேலும் இவர்களுக்குள் பாரில் எதற்காக தகராறு ஏற்பட்டது எதற்காக காரை வேகமாக இயக்கி இருசக்கர வாகனத்தில் மீது மோதி 18 வயது இலங்கை தமிழ் பெண்ணை கொலை செய்தார்கள் என்று குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த FL3 மதுபான விடுதியில் சிறுமிகளுக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் 21 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இவர்கள் எப்படி சிறுமியை பார்க்கும் அனுமதித்தார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.