12.6.1976: இந்தியாவுடன் கடல் எல்லையை நிர்ணயிக்க ஸ்ரீலங்கா அரசின் மசோதா
இந்தியாவுடன் கடல் எல்லையை நிர்ணயிக்க ஸ்ரீலங்கா அரசின் மசோதா பற்றி...
கொழும்பு, ஜூன். 11 - இந்தியா - இலங்கை இடையே கடல் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசு இன்று ஒரு மசோதாவை கெஜட்டில் பிரசுரித்துள்ளது.
வங்கக் கடலிலிருந்து மன்னார் வளைகுடா வரையிலும், அதற்கு அப்பால் இந்து மகா சமுத்திரத்திலும் இருநாடுகளுக்கும் இடைப்பட்ட கடல் எல்லை குறித்து இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் புதிய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முறையில் இந்த மசோதா 2 வாரங்களுக்குப் பிறகு பார்லிமெண்டில் விவாதத்துக்கு வரும்.
Advertisement
Advertisement
ஸ்ரீலங்காவின் சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தாக இல்லாத வரையில் பல்வேறு நாடுகளின் கப்பல்களுக்கும் ஸ்ரீலங்காவின் கடலாதிக்கப் பகுதி வழியே செல்ல உரிமை உண்டு என்று இந்த மசோதா உத்தரவாதம் செய்கிறது.
இந்த மசோதாவின்படி ஸ்ரீலங்காவின் கடலாதிக்கப் பிராந்தியத்தில் நுழைகின்ற போர்க் கப்பல்கள் முன்கூட்டி அனுமதி பெற்றாக வேண்டும். இதேபோல ஸ்ரீலங்காவின் வான் பிராந்தியத்தில் பிற நாட்டு விமானங்களின் நடமாட்டத்துக்கும் மசோதாவில் கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதாவானது ஸ்ரீலங்காவின் கடலாதிக்கப் பிராந்தியம், கடல் மண்டலம், வான் பிராந்தியம் ஆகியவற்றை வரையறுக்கிறது. நாட்டின் ஆதிபத்ய உரிமை, அதன் பிராந்திய உரிமை, வான் பிராந்தியம், கடல் படுகை ஆகியவற்றைப் பாதுகாப்பதே நோக்கமாகும் என்று மசோதா கூறுகிறது.
சென்னை வரும் ரயில் வண்டியில் படுக்கைக்குள் இளைஞர் பிணம்
விஜயவாடா, ஜூன். 11 - பொகாரோ - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுருட்டி வைக்கப்பட்ட படுக்கைக்குள் இளைஞர் ஒருவரின் பிணம் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் யார் என்பது தெரியவில்லை. அந்த இளைஞருக்கு சுமார் 25 வயதிருக்கும்.
ரயில் பெட்டியிலிருந்து பிரயாணிகள் துர்நாற்றம் வீசுவதாகப் புகார் கூறி அனகாபள்ளியில் ரயிலை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து ஒரு படுக்கைக்குள் பிணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று ரயில்வே போலீஸ் சூபரின்டெண்ட் ஜனகராஜ் தெரிவித்தார்.
பிணமாகக் கிடந்த அந்த இளைஞரின் கைகளும் கால்களும் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன என்றும் பொட்டு அருகே காயம் காணப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
பிணம் அனகாபள்ளியில் இறக்கப்பட்டது. ரயில்வே போலீஸார் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sri Lankan government bill to demarcate the maritime boundary with India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.