வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்!
வினாத்தாள் கசிவைத் தடுக்க மக்களவையில் தாக்கலாகும் சட்டத் திருத்த மசோதா பற்றி...
வினாத்தாள் கசிவு தொடா்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.
‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ என்ற இந்த மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு முறைகேடு தொடா்பான வழக்குகளில் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை செய்யப்பட்ட ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம் 2024’-இல் திருத்தங்கள் மேற்கொண்டு, பொதுத் தோ்வு முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
Advertisement
Advertisement
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை, நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றம் தொடா்ந்து முடங்கியது.
இந்த நிலையில், தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 27) அறிமுகம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, மக்களவை உறுப்பினா்களுக்கு அந்த மசோதா நகல் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்படும். அதனுடன், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இதில், திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகள் தொடா்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கு மீது உடனடியாக விசாரணை தொடங்கி தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு, குற்றபத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு, தோ்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக, எந்தவொரு அமா்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கு இந்த சட்டத் திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
Question paper malpractice! 10 years in prison; ₹50 lakh fine! Amendment bill to be tabled tomorrow!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.