நாமக்கல்

மோகனூர் சர்க்கரை ஆலையில் தினசரி 10,000 லிட்டர் கிருமி நாசினி திரவம் உற்பத்தி

DIN

கரோனா தீநுண்மி தொற்றை தடுக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் பயன்பாட்டுக்காக, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினமும் 10 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி திரவம் (சானிடைசர்) உற்பத்தி செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நாமக்கல், திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரவைக்காக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 1964-இல் தினசரி 1000 டன் கரும்பு அரவைத் திறனுடன் தொடங்கப்பட்டு, தற்போது பல்வேறு மாற்றங்களுடன் 2,500 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 மத்திய, மாநில அரசுகள் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை இந்த சர்க்கரை ஆலைக்கு வழங்கியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக அரவைக்கு போதிய கரும்புகள் கிடைக்காததால் ஆலையில் சர்க்கரை உற்பத்தி திறன் பாதிப்படைந்துள்ளது. இவை தவிர்த்து எத்தனால் ஸ்பிரிட் 55 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் ஆலையில் சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி சரிவில் உள்ளது. அவை சீராகும் வரையில் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்பாட்டுக்காக கிருமி நாசினி திரவம் உற்பத்தி செய்யும் பணியை ஆலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

தரமான மற்றும் பாதிப்பற்ற வகையிலான கிருமி நாசினி திரவமானது தினசரி 10 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கான்பூர் தேசிய சர்க்கரை ஆராய்ச்சி மையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்னை தலைமை செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும், இதர துறை அலுவலகங்களுக்கும் 2 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் வீதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சி.விஜய்பாபு கூறியதாவது: இந்த சர்க்கரை ஆலையின் பெயரை சுருக்கி "சாகோஸ்' என்ற பெயரில் 100 சதவீத தரமான கிருமி நாசினி திரவம் தயாரிக்கப்படுகிறது. தலைமை செயலகம் மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். 100 மில்லி முதல் 10 லிட்டர் வரையில் சானிடைசர் புட்டிகள் உள்ளன.

இதில் 100 மில்லி-ரூ.48, 500 மில்லி-ரூ.230, 1000 மில்லி-ரூ.460, 5 லிட்டர்-ரூ.2,210, 10 லிட்டர்-ரூ.4,400 என்ற விலையில் விற்பனை செய்கிறோம். தினசரி 10 ஆயிரம் லிட்டர் உற்பத்தி என்பதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். சர்க்கரை, எத்தனால் உற்பத்தியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பியே.. நமீதா கிருஷ்ணமூர்த்தி!

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT