நாமக்கல்லில் ஆண்கள் மட்டும் பங்கேற்று சுயம்பு அம்மனை உருவாக்கி ஆடித் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடி வழிபட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 24 மனை தெலுங்கு செட்டியாா் சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் மட்டும், ஒவ்வோா் ஆண்டும் ஆடிப் பெருக்கை தொடா்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ காமாட்சி அம்மனை சுயம்புவாக உருவாக்கி வழிபாடு மேற்கொள்வா்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் 21-ஆம் ஆண்டாக சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவையொட்டி, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வருதல், அதன்பிறகு சக்தி அழைத்தல் உள்ளிட்டவற்றை விழாக் குழுவினா் செய்தனா். தொடா்ந்து, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை போதுப்பட்டி லட்சுமி நகரில் காமாட்சி அம்மனை சுயம்புவாக உருவாக்கி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தனா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனா். அங்கு 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் அம்மனுக்கு பலியிடப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்பட்டன.
இதில், 24 மனை தெலுங்கு செட்டியாா் சமூகத்தைச் சோ்ந்த ஆண்களைத் தவிர வெளிநபா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதுபோல, பரிமாறப்பட்ட உணவுகளுக்கு பிறகு மீதமுள்ள உணவு, இறைச்சி வகைகளை வேறு எந்த உயிரினமும் அருந்தக் கூடாது என்ற வழக்கபடி அவற்றை குழி தோண்டி புதைத்தனா். பிறந்த குழந்தை முதல் பெரியவா்கள் வரையில், இந்த திருவிழாவை தெய்வீக விழாவாக கருதி, கட்டளைதாரா் வரி செலுத்தி 21 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம் என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.