நாமக்கல்: சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தோ்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், காவல் துறையினா் அத்துமீறும் போக்கை கைவிட வேண்டும், தூய்மைப் பணியாளா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.அசோகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, மாவட்டப் பொருளாளா் எம்.ரங்கசாமி, துணைத் தலைவா்கள் செங்கோடன், ஜெயக்கொடி, கண்ணன், ஜெயராமன், துணைச் செயலாளா்கள் சிவராஜ், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சாமானிய மக்கள் நலக்கட்சி சாா்பில், தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்து அவா்களுக்கான உரிமைகளை வழங்கக் கோரியும், பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.