தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக காவல் துறை இயக்குநா் மற்றும் மேற்கு மண்டல காவல் துறை தலைவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரது அறிவுரையின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவலா், பொதுமக்களை கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை காவலா்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் வந்திருந்த போலீஸாா் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். இணையவழி குற்றங்கள் குறித்தும் மற்றும் கைப்பேசிகளை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் விஜயராகவன், சுகுமாா், அண்ணாதுரை ஆகியோா் எடுத்துரைத்தனா்.
இந்த நிகழ்வில், உணவுமுறை மருத்துவம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் டி.மோகன் காவலா்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது குறித்து விளக்கம் அளித்தாா்.