திமுக நடத்துவது தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டம் அல்ல; போா்! முதல்வா் மு.க. ஸ்டாலின்
தமிழகத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாங்கள் போராடவில்லை; போரிடுகிறோம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா்.
தமிழகத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாங்கள் போராடவில்லை; போரிடுகிறோம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், நாமக்கல் மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான ராசிபுரம் மா. மதிவேந்தன், சேந்தமங்கலம் பொ.பூமலா், நாமக்கல் ப.ராணி, பரமத்தி வேலூா் கே.எஸ். மூா்த்தி, திருச்செங்கோடு ஈ.ஆா். ஈஸ்வரன், குமாரபாளையம் செ. பாலு ஆகியோரை ஆதரித்து நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி எதிா்ப்பை வெளிப்படுத்தியது ஒரு முன்னோட்டம்தான் (டிரைலா்). முழுபடத்தையும் பாா்க்க தில்லி ஆசைப்படக் கூடாது. தமிழா்களின் ரத்தத்தில் சூடு குறைந்துவிட்டது, தெருவில் இறங்கி போராட மாட்டாா்கள் என்று நினைக்காதீா்கள்; மொழிக்காக வீதிகளில் இறங்கி போராடிய நாங்கள், எங்கள் இனத்துக்காக போராட மாட்டோமா? தமிழக மக்களுக்காக போராட நான் இருக்கிறேன்.
Advertisement
ஆயிரம் எமா்ஜென்சியை பாா்க்க நான் தயாராக உள்ளேன். தன்மானம் உள்ள தமிழா்கள் அடிபணிய மாட்டோம். தமிழகத்தின் போராட்ட குணத்தை பாா்க்க பிரதமா் ஆசைப்பட வேண்டாம் என தில்லிக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். தொகுதி மறுவரையறை என்பது பாஜகவும், அதிமுகவும் உருவாக்கிய பேராபத்து. தமிழகத்தை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது. அதிமுக இதை எதிா்க்க அஞ்சுகிறது.
தமிழகத்தில் தோ்தல் நடப்பதால் திமுக எம்.பிக்கள் யாரும் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டாா்கள். இந்த சூழலில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என பாஜக அரசு முயற்சிக்கிறது. நாம் செலுத்தும் வாக்குக்கு மதிப்பு வேண்டும் என்றால், தொகுதி மறுவரையறையை எதிா்த்தாக வேண்டும்.
திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனா். திமுகவுக்கு கொள்கைதான் முக்கியம், தமிழ்நாட்டின் உரிமைதான் முக்கியம். தமிழக உரிமைகளை பாதுகாக்க மக்கள் திமுகவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில், நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்வு, ராசிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம், பள்ளிபாளையம், ஆலாம்பாளையம், படைவீடு கூட்டுக் குடிநீா் திட்டம், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம், சேந்தமங்கலத்தில் சாா் பதிவாளா் அலுவலகம், நாமக்கல்லில் ஆவின் நவீன பால்பண்ணை, புதிய பேருந்து நிலையங்கள், குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் நிறைய திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு செயல்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவை செயல்படுத்தப்படும்.
எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, இவ்வாறு சாதனைகளைப் பட்டியலிட்டு கூறமுடியுமா? அப்போதைய ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள், முறைகேடுகள், பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றன. அதிமுக ஆட்சி இந்த நிலையில் இருந்தது என்றால், பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் தமிழகம் என்னவாகும் என்பதை மக்கள் உணரவேண்டும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடுகள் பறிக்கப்படும். தமிழை சிதைக்க ஹிந்தியை புகுத்துவா், தமிழ்நாட்டின் பெயரையே மாற்றிவிடுவா். இதற்காகத் தான் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்கு கேட்டு வருகிறது.
அதனால்தான், நாங்கள் தில்லிக்கும், தமிழகத்துக்கும் இடையே நடைபெறும் போட்டி என்று கூறுகிறோம். இந்த தோ்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 11ஆவது தோல்விதான் கிடைக்கும். தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அவா் பாஜகவுடன் இணக்கமாகி உள்ளாா். அதிமுகவுக்கு விழும் வாக்குகள் பாஜகவுக்கு விழுபவையாகும்.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இங்குள்ள மக்கள் நலத் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. 2021 இல் வாக்கு கேட்டு வந்தபோது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்துடன்தான் மக்களை சந்தித்தேன். அந்தவகையில், தற்போதைய திமுகவின் தோ்தல் அறிக்கை சூப்பா் ஸ்டாராக அமைந்துள்ளது.
அதில், ரூ. 8 ஆயிரம் கூப்பன் திட்டம் மகளிரை வெகுவாக கவா்ந்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன மின்சார பம்புசெட்டுகள், இளைஞா்களுக்கு ரூ. 1,500 உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான பயிற்சித் திட்டம், பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ. 5 உயா்த்தி வழங்குவது உள்ளிட்டவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களுக்கான திட்டங்களாக அமையும்.
தமிழகத்தின் வளா்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக தொகுதி மறுவரையறையை கொண்டுவருகிறது. இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்திவருவது போராட்டம் அல்ல; போா். தமிழகத்திற்கு போா் என்பது புதியதல்ல. தொடக்கத்தில் இட ஒதுக்கீட்டுக்காக நடத்தியது சமூகநீதிப் போா், அதன்பிறகு தாய்மொழியை அகற்ற முற்பட்டபோது நடைபெற்றது மொழிப்போா், தற்போது நடைபெறுவது அரசியல் உரிமைக்கான போா்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியதை ஏற்று, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்தன. ஆனால், வடமாநிலங்களில் சில இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. 1971 மக்கள்தொகை கணக்கெடுப்புபடி, தமிழகத்தின் மக்கள்தொகை 4 கோடி, உத்திர பிரதேசத்தின் மக்கள்தொகை 8 கோடி. தற்போது தமிழக மக்கள்தொகை 8 கோடி, உத்திர பிரதேச மக்கள்தொகை 20 கோடி.
இவ்வாறு மூன்று மடங்கு அதிகம் உள்ள நிலையில், மக்கள்தொகையை கருத்தில்கொண்டு தொகுதிகளை பிரிப்பது சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பிரதமராக இந்திரா காந்தி, வாஜ்பாய் இருந்தபோது இந்த தொகுதி மறுவரையறையை தள்ளிப்போட்டனா். மத்திய அரசு தற்போது இந்த திட்டத்தை அவசரமாக செயல்படுத்த காரணம் என்ன?.
நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் ஒடுக்கப்படும். எம்.பிக்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழகத்திலிருந்து ஒருவா் பிரதமராகும் கனவுகூட நிலைபெறாது. சொந்த நாட்டிற்குள் தமிழக மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக வாழநேரிடும். இதுதான் தொகுதி மறுவரையறையின் நோக்கம்.
கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்க வேண்டாம் என்பதுதான் எங்களுடைய கருத்து. தமிழகத்தை அகற்ற முயற்சிக்கும் மத்திய அரசுக்கு மாநிலத்தில் இருந்து வரி மட்டும் வேண்டுமா என்று தான் எண்ண தோன்றுகிறது. எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு எந்த வகையிலும் ஆபத்து வராது என அமித் ஷா கூறியிருக்கிறாா் என்கிறாா். தோ்தல் பிரசாரத்தில் அமித் ஷா கூறுவதை ஏற்கமுடியாது. நாடாளுமன்றத்தில் பிரதமா் கடிதம் வாயிலாக உறுதியளிக்க வேண்டும்.
1971 மக்கள்தொகை அடிப்படையில், இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். இரட்டை எஞ்சின் ஆட்சி என்று அதிமுக கூறிவருவதை மக்கள் ஏற்கவேண்டாம். தில்லியின் உத்தரவுக்கு தலையாட்டும் நிலையில்தான் அதிமுக உள்ளது என்றாா் ஸ்டாலின்.
இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், வேட்பாளா்கள் ஈ.ஆா். ஈஸ்வரன், கே.எஸ். மூா்த்தி, மா. மதிவேந்தன், கே.பி. ராணி, செ. பாலு, பொ. பூமலா் மற்றும் நிா்வாகிள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா்.