முகப்பு
தமிழ்நாடு

தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின்

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரை...

மு.க. ஸ்டாலின் - X / DMK
பகிர்:

திமுக தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளில் மட்டுமே வென்று, தவெகவிடம் ஆட்சியை இழந்தது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

Advertisement

Advertisement

இந்த கூட்டத்தில், திமுக தலைவர் என்ற முறையில் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

”என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.

நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அமைந்திருக்கிறது. அதுவும் நமது கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. நமது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கிறது.

வரலாற்றைப் பார்த்தால் ஆட்சியில் இருந்து தோல்வியை சந்தித்த போதெல்லாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம். தற்போது திமுக 59 இடங்களிலும், கூட்டணியுடன் சேர்த்து 73 இடங்களிலும் வென்றிருக்கிறோம்.

தற்போது நம்மை பார்ப்பவர்கள் அனைவரும், திமுக வெற்றி பெற்றுவிடும், அதனால் எனது ஒரு வாக்கில் என்ன நடந்துவிடும் என்று தெரியாமல் போட்டுவிட்டோம் என்று புலம்புகிறார்கள். இப்படி ஒரு கட்சிக்கு வாக்களித்து உட்காற வைத்துவிட்டோம் என்று எண்ணி வருந்துகிறார்கள். இதுதான் நமது 5 ஆண்டுகால ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். நமது உழைப்புக்கு கிடைத்த சான்று.

பொது வாழ்க்கையில் வெற்றி தோல்வி சாதாரணம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல்.

மற்றவர்கள் மாதிரி எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதியில் ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாமல் தோல்வியிலும் தைரியமாக இருந்தோம்.

என்னை பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன், உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறி உழைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை செய்தோம்.

தோல்விக்கு யாரையும் கைக் காட்டாதீர்கள், அடுத்தவர் மேல பழி போடாதீர்கள். கட்சித் தலைவர்கள் என்ற முறையில் நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது.

எங்க கோளாறு நடந்துச்சு? எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம். இதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொருத்தரும் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதிவாரியாக, அனைத்து மட்ட நிர்வாகிகள் மத்தியிலும் கருத்து கேட்க வேண்டும். அவர்கள் குரலுக்கு நாம் காது கொடுக்க வேண்டும். அதற்காக தலைமை சார்பில் கள ஆய்வு குழு அமைக்கப் போகிறேன். அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து 20 நாள்களுக்குள் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

கட்சி தொண்டர்களின் கருத்துகளை பெறப் போகிறேன். அதற்காக தனி இணையதளம் நாளையே அறிவிக்கப்படும். அதில் அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம். மக்களால் கொடுக்கப்படும் ஆலோசனைகள், கருத்துகளை வைத்து அமைப்பு ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்யவுள்ளேன்.

ஒருவேளை யாராவது, “என்னால் செயல்பட முடியாது” என்று நினைத்தால் மனப்பூர்வமாக முன் வந்து விலகிக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

I take responsibility for the defeat; those unable to perform may step down M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments