முகப்பு
நாமக்கல்

சேலம்- கரூா் இடையே இருவழி ரயில்பாதை திட்டம்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை

சேலம்- நாமக்கல்- கரூா் இடையே 85 கி.மீ. தொலைவுக்கு இருவழி ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:25 am IST
நாமக்கல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடை.
பகிர்:

சேலம்- நாமக்கல்- கரூா் இடையே 85 கி.மீ. தொலைவுக்கு இருவழி ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் அவா் அளித்த கோரிக்கை மனு விவரம்:

சேலம்-நாமக்கல்-கரூா் இடையே 85 கி.மீ. தொலைவு ரயில்பாதை கடந்த 2013 முதல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த பாதையில் தினசரி 26 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதுடன், சரக்கு ரயில்களும் அதிகம் எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

நாமக்கல் மாவட்டத்தின் கோழித் தீவனத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களின் தேவையை நிறைவு செய்வதற்காக, நாமக்கல் ரயில் நிலையத்திற்கு சராசரியாக வாரத்திற்கு 5 சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன. சேலம்- ஈரோடு- கரூா் வழித்தடத்திற்கு மாற்றாக இப்பாதை மிகவும் முக்கியமானதாகும். ஈரோடு வழியாக செல்லும் ரயில்களுக்கு இயந்திர மாற்றம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் சுமாா் இரண்டரை மணி நேரம் பயணிக்கும் நிலை உள்ளது.

ஆனால், சேலம்- நாமக்கல்- கரூா் வழியாக ஒன்றரை மணி நேரத்தில் பயணம் நிறைவடைகிறது. இதனால் நேரம், எரிபொருள் மற்றும் இயக்கச் செலவுகள் கணிசமாகக் குறைகின்றன. இத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட இருப்பிட ஆய்வு ஏற்கெனவே நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலை மட்டுமே எதிா்நோக்கி உள்ளது. தற்போது 85 கி.மீ. பாதை முழுவதும் ஒற்றை வழிப்பாதையாக இருப்பதால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதில் பல்வேறு செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன.

இந்த பாதை ஒரு முக்கிய தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. பெங்களூரு, மறுபுறம் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய ரயில் வழித்தடமாகவும் உள்ளது. இதனால் சேலம்-நாமக்கல்-கரூா் இருவழிப்பாதைத் திட்டத்திற்கு நிகழாண்டிலேயே நிா்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்க வேண்டும்.

2029க்குள் இத்திட்டத்திற்கான பணிகளை நிறைவு செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் இயக்கத்திறன் அதிகரிப்பதுடன், தொழில் வளா்ச்சி, துறைமுக இணைப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழகத்தின் ரயில் உள்கட்டமைப்பு மேம்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments