ஆத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஆத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர் ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ் (38). இவர், நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து செல்வகணேஷ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று வீட்டைப் பார்வையிட்டனர். வீட்டில் சிசி டிவி கேமராவில் பதிவானக் காட்சிகளை பார்வையிட்டனர். சனிக்கிழமை இரவு இரண்டரை மணியளவில் முகத்தில் துணிகட்டியிருந்த இரு இளைஞர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் செல்வது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதே வீட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது ரோந்துப் பணி போலீஸார் வருவதைப் பார்த்து மர்ம நபர்கள் ஓடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.