சேலம்

தில்லியில் இறந்த சேலம் மாணவரின் மரணம் குறித்து ஓராண்டாகியும் விசாரணை நடத்தவில்லை: எம்எல்ஏ ஆர். ராஜேந்திரன்

DIN

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் மர்மமாக இறந்த சேலம் மாணவரின் மரணம் குறித்து ஓராண்டாகியும் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும்,  வழக்குரைஞருமான ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம்- அலமேலு தம்பதியின் மகன் முத்துகிருஷ்ணன். இவர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வு படிப்பு பயின்று வந்த நிலையில்,  கடந்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி பல்கலைக்கழக விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,  இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தின.  மேலும், தில்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருவது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 
அப்போது, தமிழக அரசின் சார்பில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாணவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்த உதவி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில், மாணவர் முத்துகிருஷ்ணனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த  பின்னர்,  ஆர்.ராஜேந்திரன் கூறியது:-
முத்துகிருஷ்ணனின் இறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மத்திய அரசு  மேற்கொள்ளவில்லை. அதே போல மாணவரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகனை இழந்த குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.  மாணவர் மரணம் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT