ஓமலூர் வட்டார கிராமங்களில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ஓமலூர் வட்டார கிராமங்களில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓமலூர் வட்டார கிராமங்களில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
எள் செடிகளை பராமரிக்க தேவையான அனைத்து ஆலோசனை மற்றும் உதவிகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் கோடை காலத்தில் குறைந்த நீர்ப் பாசனம், அனைத்து மண்ணிலும் நல்ல விளைச்சல் கொடுக்கும் என்பதால் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து ஓமலூர் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கூறியது:
ஆடி, ஆவணி காரிப் பருவம், மாசி, பங்குனி ரபி பருவம் ஆகும்.அதன்படி தற்போது ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளை எள் மகசூல் குறைவாகக் கிடைப்பதால், கறுப்பு எள்ளை பயிரிடுவதையே விவசாயிகள் அதிகமாக விரும்புகின்றனர். அவ்வாறு பயிரிட்டுள்ள எள் செடிகளில் காய்கள் வெடிப்பதைத் தடுக்க,செடிகளை அறுவடை செய்து, கட்டுக்கட்டாக அடுக்கி வைத்தல் வேண்டும்.செடிகளை தலைக் கீழாக மூன்று நாள்களுக்கு அடுக்கிவைத்த பின், பிரித்து செடிகளை உலர்த்தி, காய்களை வெடிக்க வைத்து, தட்டி, எள்ளை மட்டும் எளிதாக எடுக்கலாம் என்று கூறினர்.
ஓமலூர் வட்டாரத்தில் விளையும் எள்ளை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். மேலும், பேக்கரி,உணவுப் பொருள்கள், வாசனை மற்றும் அழகு பொருள்கள் தயாரிப்பில் எள் பயன்படுவதால்,ஆண்டு தோறும் எள்ளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏக்கருக்கு, ஒன்றரை கிலோ விதை எள் பயன்படுத்தி, 300 முதல் 350 கிலோ வரை மகசூல் பெற முடியும். நடப்பாண்டு, கறுப்பு எள் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரைக்கும் கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு ரூ.60 -க்கு விற்பனையான நிலையில் நடப்பாண்டு சற்று விலைக் கூடியதால், கணிசமான அளவு லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினர்.