முகப்பு
சேலம்

தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் வளைவுகளில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் விபத்துகள் நிகழும் அபாய வளைவுகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:27 AM
பகிர்:

தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் விபத்துகள் நிகழும் அபாய வளைவுகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலை 20 கி.மீ. தூரமுடையது. இச்சாலையின் இருபுறமும் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. இச்சாலையில் தம்மம்பட்டியை அடுத்த கோனேரிப்பட்டிக்கு முன்பாக அபாய வளைவு உள்ளது. இந்த வளைவில் இருசக்கர வாகனங்கள், கார்கள், டெம்போ போன்ற வாகனங்கள் மழைக் காலத்தில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இப் பகுதியில் வேகத்தடைகள் அமைக்கவேண்டும். அதேபோல் கொண்டயம்பள்ளிக்கு முன்பாக கீற்றுப்பின்னும் பகுதியில் சாலையில் வளைவு உள்ளது. இப்பகுதியிலும் வேகத்தடைகள் அமைக்கவேண்டும். இதையடுத்து, கூடமலை ஊராட்சி தொடங்கும் பகுதியில் ஓடைப்பகுதியில் சாலை மிகவும் தாழ்வாக இறங்கி, ஏறுவதுடன் வளைவாகவும் காணப்படுகிறது. இப்பகுதிக்கு முன்னும், பின்னும் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை குறைக்கலாம். அதேபோல கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு மேற்குப் புறத்தில் ஆபத்தான வளைவு காணப்படுகிறது. அப்பகுதியிலும் வேகத்தடைகள் அமைத்தால், விபத்து இல்லா பகுதியாக காணப்படும்.
 மேலும், கூடமலை ஊராட்சியின் முடிவில், ஓடைப்பகுதியில் சாலை மிகவும் தாழ்வாகச் செல்லும் பகுதியில் கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டி நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே, இப்பகுதியிலும் வேகத்தடைகள் அமைத்தால் விபத்து பயமின்றி வாகனங்கள் செல்லலாம். மேலும், கெங்கவல்லியில் இலுப்பைத் தோப்பு வளைவு "எஸ்' வடிவில் காணப்படுகிறது. இங்கு இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கெங்கவல்லி சிவன்கோயிலுக்கு அருகிலுள்ள உடனடி வளைவு மிகவும் அபாயகரமான வளைவாக காணப்படுகிறது. அந்த வளைவில் எதிரில் வாகனங்கள் வருவதே தெரிவதில்லை என கூறப்படுகிறது. எனவே தம்மம்பட்டியிலிருந்து - கெங்கவல்லி சாலையில் மேற்கண்ட அபாய வளைவுகளில் நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடைகள், பாதுகாப்பு தடுப்புகளை அமைத்தால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதுகாப்பாக இப்பகுதிகளைக் க டக்கலாம் என்பதோடு தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்கலாம். விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மனித உயிர்களை காக்கவேண்டும் என்பது சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
 இது பொதுமக்கள் கூறியது:
 இளைஞர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் வேகமாகவும், பாதுகாப்பின்றியும் சென்று அபாய வளைவுகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். கடந்த வாரம் தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் கீரிப்பட்டி மேல்கணவாய் பகுதியில் அபாய வளைவில் வேகமாகச் சென்ற, கெங்கவல்லி இளைஞர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலை மற்றும் மல்லியகரை வழியாக ஆத்தூர் செல்லும் சாலையில் அபாய வளைவுகளில் நெடுஞ்சாலைத் துறையினர் தடுப்புக்கட்டைகள் அல்லது வேகத்தடைகளை அமைத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.