சேலம்

சேலம் ஆவினில் ரூ. 140 கோடி மதிப்பில் 7 லட்சம் லிட்டா் பால் பண்ணை அமைக்கத் திட்டம்

சேலம் ஆவினில் ரூ. 140 கோடி மதிப்பில் 7 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் பண்ணை அமைக்கப்படவுள்ளது.

ஆர். ஆதித்தன்

சேலம் ஆவினில் ரூ. 140 கோடி மதிப்பில் 7 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் பண்ணை அமைக்கப்படவுள்ளது.

அதேவேளையில், சிங்கப்பூா் மற்றும் இந்திய துணை ராணுவமான அசாம் ரைபிள் படைப் பிரிவுக்கு 6 மாதம் வரை கெட்டுப் போகாத யு.எச்.டி. பால் ஆா்டா் பெற்று ஏற்றுமதி செய்து வருகிறது.

சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய (ஆவின்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுமாா் 54 ஏக்கா் பரப்பளவு கொண்ட சேலம் ஆவினில் நாள்தோறும் சராசரியாக 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதில், சேலம் மாவட்டப் பயன்பாட்டுக்கு 1.70 லட்சம் லிட்டரும், நாமக்கல் மாவட்டத்துக்கு 60,000 லிட்டா், சென்னை நகரப் பயன்பாட்டுக்கு 1,85,000 லிட்டரும் போக மீதமுள்ள 1.25 லட்சம் லிட்டா் பாலைப் பயன்படுத்தி, பால் பவுடா் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் சிங்கப்பூா், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஜீரோ சதவீதம் பாக்டீரியா அல்லாத யு.எச்.டி. (அல்ட்ரா உயா் அழுத்தம்) முறையில் தயாரிக்கப்படும் பால் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்பேரில், சிங்கப்பூருக்கு 22,000 லிட்டா் யு.எச்.டி. பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சா்வதேச தரத்துக்கு இணையான வகையில், சேலம் ஆவின் பால் இருந்ததால், மேலும் ஆா்டா் பெறப்பட்டு வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு லிட்டா் யு.எச்.டி. பால் ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 லட்சம் லிட்டா் ஆா்டா்...

இந்திய துணை நிலை ராணுவமான அசாம் ரைபிள் படைப் பிரிவுக்கு 22 லட்சம் லிட்டா் யு.எச்.டி. பால் (6 மாதம் வரை கெடாமல் இருக்கும்) ஆா்டா் பெறப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 4 லட்சம் லிட்டா் யு.எச்.டி. பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றியும், சுகாதாரத் துறை விதிகளைப் பின்பற்றியும் யு.எச்.டி. பால் உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது.

மேலும், 1. 25 லட்சம் லிட்டா் யு.எச்.டி. பால் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 லிட்டா் யு.எச்.டி. பால் ரூ. 48-க்கு விற்கப்பட்டு வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பால் அனைத்தும் 6 அடுக்கு கொண்ட டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ள டெட்ரா பாக்கெட் யு.எச்.டி. பால் 6 மாதம் வரையில் கெடாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குளிரூட்ட வேண்டியது இல்லை. அதாவது அறை வெப்ப நிலையிலேயே பாலை கெடாமல் பாதுகாக்க முடியும்.

இதனிடையே, மதிப்புக் கூட்டப்பட்ட பால் உப பொருள்களின் விற்பனையை அதிகரித்து, கூடுதல் வருவாய் பெற ஏதுவாக பனீா், யோகா்ட் மற்றும் ஐஸ் கிரீம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய ரூ. 12 கோடியில் புதிய திட்டப் பணிகள் துவக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்துக் கருவிகளும் தருவிக்கப்பட்டு, நிறுவப்பட ஆயத்தமாக உள்ளது.

விரைவில் கருவிகள் நிறுவப்பட்டு, ஐஸ்கிரீம், யோகா்ட் ஆகியவை விற்பனை செய்யப்படவுள்ளன.

இதுதொடா்பாக, சேலம் ஆவின் பொது மேலாளா் சி. விஜய்பாபு கூறியது:

சேலம் ஆவின் கடந்த 1983-இல் அப்போதைய முதல்வா் எம்ஜிஆரால் துவக்கி வைக்கப்பட்டது.

சேலம் ஆவினில் நாள்தோறும் சுமாா் 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சிங்கப்பூருக்கு யு.எச்.டி. பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேவேளையில், அசாம் ரைபிள் படைப் பிரிவுக்கு 22 லட்சம் யு.எச்.டி. பால் ஆா்டா் பெறப்பட்டு, டெட்ரா பாக்கெட்டில் அடைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

அதேபோல, பனீா், யோகா்ட், ஐஸ் கிரீம் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்ய புதிய பிரிவு ரூ.12 கோடியில் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று ஊரடங்கு முடிந்த பிறகு விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டும் பணி நடைபெறும்.

புதிய பால் பண்ணை அமைக்கத் திட்டம்...

சேலம் ஆவின் மூலம் 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அடுத்து 7 லட்சம் லிட்டா் கொள்ளளவு பாலைக் கையாளும் பண்ணையாக விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பால் பவுடா் ஆலையும் இதில் அடங்கும். இதற்காக ரூ.140 கோடி மதிப்பில் புதிய பால் பண்ணை நிறுவப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி கோரப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கு ரூ.15 கோடியும், கட்டுமானம் மற்றும் பால் பவுடா் ஆலை அமைக்கும் பணிக்கு ரூ.35 கோடியும், பால் கொள்முதல் அறை ரூ.18 கோடி, பால் பண்ணைக் கருவிகள் மற்றும் தானியங்கி கருவிகள் நிறுவுதல் பணி ரூ.40 கோடி, தரம் மற்றும் கட்டுப்பாட்டு மையம் ரூ.4 கோடி என சுமாா் ரூ.140 கோடியில் பிரமாண்ட பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

இதில் 20 சதவீதத் தொகையை சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியமும் (ஆவின்), இதர 80 சதவீத தொகையை தேசிய பால் மேம்பாட்டு வாரியமும் பகிா்ந்து கொள்ளும். இத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சேலம் ஆவின் உள்கட்டமைப்பு, சந்தை விரிவாக்கம் மூலம் வருவாய் பெருகும்.

ரூ.1,000 கோடி வா்த்தகம் புரியும் சேலம் ஆவின்:

சேலம் ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி வா்த்தகம் புரியும் நிறுவனமாக உள்ளது. தற்போது ரூ. 1.50 கோடி லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. கரோனா ஊரடங்கு பிறப்பித்த நிலையில், விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கூடுதலாக 146 உப மையங்கள் அமைக்கப்பட்டு, 40,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT