சேலம் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கைது
சேலத்தில் காரில் ரூ. 3.50 லட்சம் லஞ்சப் பணம் கொண்டு சென்ற பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கனகராஜை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தில் காரில் ரூ. 3.50 லட்சம் லஞ்சப் பணம் கொண்டு சென்ற பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கனகராஜை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பேரூராட்சி உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த கனகராஜ் (57), கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா்.
இவா், சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 53 பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் சிலரிடம் குடிநீா், தெருவிளக்குகள் பராமரிப்பு, துப்புரவுப் பணி தொடா்பான கோப்புகளை ஒப்புதல் செய்ய பணியின் மதிப்பில் 5 சதவீதம் முதல் 10 சதவீதத் தொகையை லஞ்சமாகப் பெற்று வந்துள்ளாா்.
இதுகுறித்து அதிகாரிகள் பலா் சேலம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தனா். இதையடுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கனகராஜை போலீஸாா் கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், கனகராஜ் வெள்ளிக்கிழமை இரவு லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு கோவையில் உள்ள தனது இல்லத்துக்கு அலுவலக காரில் செல்வதாக சேலம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சேலம், அரியானூா் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்ற அவரது காரை வழிமறித்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்து, காரில் இருந்த ரூ. 3.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா் சேலம், குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கனகராஜை அழைத்துச் சென்று விசாரித்தனா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.