அம்மா சிறு மருத்துவமனை திறப்பு: மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சியில் மருத்துவ வசதிக்காக பல கி.மீ. தொலைவு சென்று வந்த மலைவாழ் மக்களுக்கு, மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சியில் மருத்துவ வசதிக்காக பல கி.மீ. தொலைவு சென்று வந்த மலைவாழ் மக்களுக்கு, மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பச்சமலை ஊராட்சியில் 33 மலைக் கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் பெரியமங்களத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே மருத்துவ வசதிகளை வழங்கி வந்தது. மலைவாழ் மக்கள் இங்கு சிகிச்சை பெற குறைந்தது 20 கி.மீ. வரவேண்டும்.
இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ், மக்களிடம் குறைகளைக் கேட்ட போது, பச்சமலை பகுதிக்கு மருத்துவ வசதி தேவை குறித்து மக்கள் தெரிவித்திருந்தனா்.
கோரிக்கையின் பேரில், பச்சமலை ஊராட்சி, மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனையைத் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதையடுத்து, மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, ஆத்தூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவா் துரை.ரமேஷ் தலைமை வகித்தாா். கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து மருத்துவமனையை திறந்து வைத்து, கா்ப்பிணிகளுக்குத் தேவையான மருத்துவப் பெட்டகங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜா, ஆத்தூா் சுகாதார மாவட்ட மருத்துவ அலுவலா் செல்வக்குமாா், வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.