சேலம்

வீரகனூரில், சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடை சந்தை மீண்டும் துவக்கக் கோரிக்கை

எஸ்.ரம்யா

கெங்கவல்லி அருகே வீரகனூரில், புகழ்பெற்ற கால்நடைச்சந்தை மீண்டும் துவக்க வேண்டும் என்று அப்பகுதியினரும், வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம். கெங்கவல்லி அருகே வீரகனூரில், மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடைச்சந்தை, வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் துவங்கி, விடிய விடிய நடைபெற்று,சனிக்கிழமை பிற்பகல் வரை நடைபெறும். இச்சந்தையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து அனைத்து வகை ஆடுகள், மாடுகள், காளைகள், கன்றுக்குட்டிகள் அனைத்தும் லாரி, டெம்போ, ஆட்டோக்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். 

அதேபோல் அவைகளை வாங்குவதற்கு வியாபாரிகள்,நான்கு சக்கரவாகனங்களை எடுத்துக்கொண்டு வந்துவிடுவர். விடிய விடிய மாட்டு வியாபாரம் நடைபெறும். சேலம் மாவட்டத்தில் கால்நடைச்சந்தை மின்னாம்பள்ளிக்கு அடுத்து, மாவட்ட எல்லையில் உள்ள வீரகனூர் சந்தைதான் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. வீரகனூரில், வாரச்சந்தை நடைபெறும் பகுதியில்தான், கால்நடை சந்தையும் நடைபெறுகிறது. வீரகனூர் பேரூராட்சிக்கு இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைத்துவருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் தொடங்கி, ஆகஸ்ட் வரை தொடர்ந்து ஐந்துமாதமாக, கரோனா தீநுண்மி பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், காய்கறி வாரச்சந்தை, கால்நடை சந்தைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 

அதனையடுத்து புகழ்பெற்ற வீரகனூர் கால்நடைச்சந்தை இதுவரை நடைபெறவில்லை. இதனால் பெரும் வியாபார இழப்பும்,வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வீரகனூர் பகுதியைச் சேர்ந்த சில மாட்டு வியாபாரிகள் கூறியதாவது, வீரகனூர் கால்நடைச்சந்தையில் வழக்கமாக ஒரு கோடி வரை வியாபாரம் நடைபெறும். அதுவும் குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகைக்கு முன்னர் நடக்கும் கால்நடை சந்தையின் மொத்த வியாபாரம் இரண்டு கோடி ரூபாயை தாண்டும் என்பது நம்பமுடியாத உண்மை. கால்நடை சந்தை, 5 மாதமாக நடைபெறாததால், கால்நடைகளை ஒரே இடத்தில் அனைத்து ரகங்களை பார்த்து, பார்த்து பிடித்ததை வாங்கிச்செல்ல முடியவில்லை. 

வியாபாரிகளும், விற்பவர்களும் இச்சந்தை இல்லாததால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்திலிந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம், என்றனர். வீரகனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகாராஜா மணிகண்டன் கூறியதாவது, விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமே, கால்நடைகள்தான். கால்நடைகளை விற்றுத்தான், தங்களது முக்கிய செலவினங்களை விவசாயிகள் செய்கின்றனர். எனவே, தமிழக
அரசு, விவசாயிகள் நலன்கருதி, கால்நடை சந்தைகளை சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் நடத்திட, அனுமதி வழங்கிட வேண்டும் என்றார்.

கிட்டத்தட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள தமிழக அரசு,விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடை சந்தைகளை மீண்டும் இயக்கிட, தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும், அப்போதுதான் வீரகனூர் கால்நடைச்சந்தை மீண்டும் இயங்கி, விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்கும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT