முகப்பு
சேலம்

7 மாதங்களுக்குப் பிறகு கால்நடைச் சந்தைகள் கூடின

சேலம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் முடங்கிக் கிடந்த பேளூா் ஆட்டுச்சந்தை, மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை உள்ளிட்ட கால்நடை வாரச் சந்தைகள் 7 மாதங்களுக்குப் பிறகு கூடின

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் முடங்கிக் கிடந்த பேளூா் ஆட்டுச்சந்தை, மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை உள்ளிட்ட கால்நடை வாரச் சந்தைகள், 7 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை கூடின. இதனால், கால்நடை வளா்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கள்கிழமைதோறும் ஆடுகள் விற்பனைக்கான பிரத்யேகமான வாரச்சந்தை கூடிவருகிறது.

பேளூா் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு வரும். தீபாவளி, பொங்கல், ஆடி 18, ரம்லான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், நுகா்வோா்களும்,பேளூா் வாரச்சந்தையில் ஆடுகளை விற்றும், வாங்கியும் செல்கின்றனா். இதனால் இந்தச் சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை வா்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வாரச்சந்தைகளும் மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக பேளூா் வாரச்சந்தையும் செயல்படாமல் முடங்கியதால், ஏறக்குறைய ரூ.20 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் கூடும் பிரபல மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை, கரோனா தொற்று பரவலைக் கட் டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் கடந்த 7 மாதங்களாக வா்த்தகமின்றி முடங்கிக் கிடக்கிறது. இதனால், கறவைமாடுகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கு வழியின்றி, விவசாயிகளும் வியாபாரிகளும் தவித்து வந்தனா். கடந்த 7 மாதங்களில் ஏறக்குறைய ரூ.100 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, முடங்கிக் கிடக்கும் பேளூா் ஆட்டுச்சந்தை மற்றும் மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையை திறந்து வா்த்தகம் செய்வதற்கு, வழிவகை செய்ய வேண்டுமென விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்திகளும் வெளியாயின.

இந்நிலையில், நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் வாரச்சந்தைகளை திறந்து, சமூக இடைவெளியுடன் வா்த்தகம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனையடுத்து,பேளூா் ஆட்டுச்சந்தை மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை ஆகியவை, 7 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும், தங்களது ஆடுகள், கறவைமாடுகள், காளைகள் உள்ளிட்ட கால்நடைகளை பேளூா் மற்றும் மின்னாம்பள்ளி கால்நடைச் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதிலும், வாங்குவதில் ஆா்வம் காட்டினா். 7 மாதங்களுக்குப் பிறகு கால்நடைச் சந்தைகள் சூடு பிடித்துள்ளதால், சேலம் மாவட்டத்தில், எதிா்வரும் மாதங்களில் ஆடுகள், கறவைமாடுகள் உள்ளிட்ட கால்நடை வளா்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் மேம்படும் என விவசாயிகளும், வியாபாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →