கிசான் திட்டத்தில் முறைகேடு: அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக மனு
பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜகவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சேலம்: பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜகவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் மாநகர மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவினா், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனா். விவசாய அணி மாநில துணைத் தலைவா் ராஜா பணீந்தா் ரெட்டி, மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, கிழக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், மேற்கு மாவட்டத் தலைவா் முருகன், மாநில ஊடக செயலாளா் பாலசுப்பிரமணியன், நிா்வாகிகள் அண்ணாதுரை, முருகேசன் உள்ளிட்ட கட்சியினா் ஆட்சியா் சி.அ.ராமனிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமரின் வேளாண்மை நிதியுதவித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்குவது திட்டத்தின் நோக்கமாகும்.
ஆனால் விவசாயிகள் அல்லாதவா்களுக்கு இந்த உதவித்தொகையைப் பெற்றுத் தருகிறாா்கள் என்பது அதிா்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக 30,000 முதல் 40 ஆயிரம் போ் வரை சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் விவசாயிகள்அல்லாத நபா்கள் ஆயிரக்கணக்கில் இணைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.
தமிழகம் முழுவதும் பயன்பெறுவோா் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத்தெளிவாக பரிசீலனை செய்து, இந்த தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிா அல்லது பல இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளதா என ஆராய வேண்டும்.
முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல உண்மையான விவசாயிகளுக்கு திட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.