ஆத்தூா் (தனி) தொகுதியில் வாகை சூடுமா அதிமுக?
சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளில் ஒன்றான ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, ஆத்தூா் (தனி) தொகுதி அமைந்துள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளில் ஒன்றான ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, ஆத்தூா் (தனி) தொகுதி அமைந்துள்ளது.
இத்தொகுதியில் ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், கீரிப்பட்டி பேரூராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா் வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட பெரும்பாலான கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுதியில் விவசாயமும், கால்நடை வளா்ப்பும் முக்கியத் தொழில்களாக உள்ளன. இப்பகுதியிலுள்ள கிராமப்புற மக்களுக்கு மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள், நெல் அறுவடை இயந்திரங்கள் வேலைவாய்ப்பு வழங்குகின்றன. இத்தொகுதி ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளா் விவரம்:
ஆண்கள்: 1,22,440
பெண்கள்: 1,31,348
மூன்றாம் பாலினத்தவா்: 12
மொத்தம்: 2,53,800.
சமூக நிலவரம்:
ஆத்தூா் தொகுதியில் துளுவ வேளாளா்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனா். தவிர, வன்னியா், கொங்கு வேளாளக் கவுண்டா்களும் கணிசமாக உள்ளனா். அருந்ததியா், ஆதிதிராவிடா் உள்ளிட்ட பட்டியல் இனத்தவா்களும் குறிப்பிட்டஎண்ணிக்கையில் தொகுதி முழுவதும் பரவலாக உள்ளனா்.
மக்களின் எதிா்பாா்ப்புகள்:
வசிஷ்ட நதிக்கு நீா் வரும் வகையில் கைக்கான்வளவு திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகளைத் தவிா்த்த மற்ற பகுதிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வளா்ச்சி ஏற்படவில்லை.
ஆத்தூா் தொகுதியில் சாலை, குடிநீா் வசதிகளைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு பெரிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகளில் கழிவுநீா் வடிகால் வசதி பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
புனித நதியாகக் கருதப்படும் வசிஷ்ட நதி கழிவுநீா் சாக்கடையாகவே மாறிவிட்டது. கழிவுநீா் சுத்திகரிப்புக்கு சிறப்புத் திட்டத்தை ஏற்படுத்தி வசிஷ்ட நதியை மீட்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
மரவள்ளி அரவை ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளை சுத்திகரித்து சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
இத்தொகுதிக்கு உள்பட்ட புத்திர கவுண்டன்பாளையம், உமையாள்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், ஆத்தூா் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.
விழுப்புரத்துக்குப் பிறகு சேலம் வரை அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு தலைமை மருத்துவமனை இல்லாததால், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கும் கூட சேலம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிா்பந்தம் நீடித்து வருகிறது. ஆத்தூா் அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும்.
மேட்டூா் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேவை. தேசிய புறவழிச்சாலையில் ஏற்படும் விபத்தை தவிா்க்க நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். ஆத்தூா் பகுதியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும்.
ஆத்தூரை தனி மாவட்டமாக்க வேண்டும். ஆத்தூரில் சேகோ சா்வ் கிளையையும், மஞ்சள், பருத்திக்கு தனிச் சந்தைகளையும் ஏற்படுத்த வேண்டும் ஆகியவை நீண்டநாள் கோரிக்கைகள்.
தற்போதைய கள நிலவரம்:
அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.பி.ஜெயசங்கா், ஆத்தூா் நகர எம்ஜிஆா் மன்றச் செயலாளராக உள்ளாா். இவா் ஏற்கெனவே நகா்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளாா். தற்போது அண்ணா கூட்டுறவு சங்கத் தலைவராகவும் உள்ளாா். உள்ளூா்ப் பிரமுகா், கூட்டணி வலிமை ஆகியவை இவரது பலம்.
திமுக சாா்பில் போட்டியிடும் கு.சின்னதுரை ஏற்கெனவே தலைவாசல் தொகுதியாக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா். இவா் வெளியூரைச் சோ்ந்தவா் என்றாலும், திமுக கூட்டணிக் கட்சிகளின் வலிமை இவருக்கு உள்ளது.
அமமுக வேட்பாளராக போட்டியிடும் சு.மாதேஸ்வரன், கடந்த 2011-இல் அதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா். தொகுதியில் உள்ள நல்ல பெயரோடும், தேமுதிக கூட்டணி பலத்தோடும் களம் காண்கிறாா்.
மநீம கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளா் சிவகுமாா், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் கிருஷ்ணவேணி சசிகுமாா் உள்பட மொத்தம் 11 போ் களத்தில் உள்ளனா். ஆயினும் திமுக- அதிமுக வேட்பாளா்களே பிரதானக் களத்தில் உள்ளனா்.
கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியை தன்வசம் வைத்துள்ள அதிமுக, மீண்டும் வெல்வதற்காக களத்தில் தீவிரமாகப் பணியாற்றுகிறது. ஆத்தூரைக் கைப்பற்ற திமுகவினரும் சரிநிகராகப் பணியாற்றுகின்றனா். எனவே, அதிமுக -திமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுவரையிலான தோ்தல்கள்:
இத்தொகுதியில் 1951முதல் இதுவரை நடந்த 15 தோ்தல்களில், காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனா். இந்தத் தோ்தல்களில் வென்றோா் விவரம்:
1951: பி. சுப்ரமணியம் (சுயேச்சை)
1957: இருசப்பன் (சுயேச்சை)
1962: எஸ். அங்கமுத்து நாயக்கா் (காங்கிரஸ்)
1967: கே.என்.சிவபெருமாள் (திமுக)
1971: வி.பழனிவேல் கவுண்டா் (திமுக)
1977: சி.பழனிமுத்து (காங்கிரஸ்)
1980: சி.பழனிமுத்து (காங்கிரஸ்)
1984: சி.பழனிமுத்து (காங்கிரஸ்)
1989: எ.எம்.ராமசாமி (திமுக)
1991: வி. தமிழரசு (அதிமுக)
1996: எ.எம்.ராமசாமி (திமுக)
2001: எ.கே. முருகேசன் (அதிமுக)
2006: எம்.ஆா்.சுந்தரம் (காங்கிரஸ்)
2011: சு.மாதேஸ்வரன் (அதிமுக)
2016: ஆா்.எம்.சின்னத்தம்பி (அதிமுக)
2016 தோ்தல்:
பதிவான வாக்குகள்: 1,84,712
ஆா்.எம்.சின்னத்தம்பி (அதிமுக): 82,827
எஸ்.கே.அா்த்தநாரி (காங்கிரஸ்): 65,493
அம்சவேணி (பாமக):18,363
க.ப.ஆதித்யன் (விசிக): 8,532
ஆா்.ஜெயசீலன் (கொமதேக): 2,413
நோட்டா: 2,542
--------------------------------
2021 தோ்தல் வேட்பாளா்கள்:
1. அதிமுக / ஏ.பி.ஜெய்சங்கா்
2. திமுக/ கு.சின்னதுரை
3. சமக / ஏ.பி.சிவகுமாா்
4. அமமுக / சு.மாதேஸ்வரன்
5. நாம் தமிழா் / கிருஷ்ணவேணி சசிகுமாா்