சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 69வது ஆண்டு தொடக்கம்: முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
சங்ககிரி நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கியதன் 69ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கியதன் 69ஆம் ஆண்டு தொடக்க விழா முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம்,சங்ககிரியில் உள்ள மாணவ, மாணவிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செங்கோடு, எடப்பாடி பள்ளிகளுக்கு சென்று பயின்று வந்தனர். அதனையடுத்து சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்பள்ளி தொடங்கப்பட்ட பின்னர் இதில் பயின்ற மாணவ, மாணவிகள் பலர் இன்று வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றிவருகின்றனர்.
பலர் அரசு பணிகளில் இருந்து ஓய்வும் பெற்றுள்ளனர். அதனையடுத்து பள்ளி தொடங்கி 68 ஆண்டுகள் நிறைவடைந்து 69வது ஆண்டு தொடக்கத்தினையொட்டி முன்னாள் மாணவர்கள் அமைப்பு மாணவர்கள் இணைந்து கேக் வெட்டியும், அனைவருக்கும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.வெங்கடேஸ்வரகுப்தா தலைமை வகித்தார்.
பள்ளித்தலைமையாசிரியர் ராஜன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் கே.கே.நடேசன், ரோட்டரி சங்க நிகழாண்டுத்தலைவி ஹெலினாகிறிஸ்டோர், உதவிதலைமையாசிரியர் ரங்கநாயகி ஆகியோர் கேக் வெட்டி தொடக்கி வைத்தனர். உதவி தலைமையாசிரியர் எம்.சக்திவேல், ஆசிரியர்கள் செந்தில்குமார், ராமசாமி, முன்னாள் மாணவர்கள் சுப்ரமணியம், பாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கே.சண்முகம், பழனிசாமி, ராமு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.