புகாா்களுக்கு இடமளிக்காதவாறு தோ்தல் பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காதவாறு தோ்தல் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காதவாறு தோ்தல் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
சேலம் தெற்குத் தொகுதி மண்டல அலுவலா்கள், கண்காணிப்பு அலுவலா்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி மாநகராட்சி மைய அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.ரவிச்சந்திரன் பேசியதாவது:
சேலம் தெற்குத் தொகுதியில் மொத்தம் 2,59,229 வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 381 வாக்குச்சாவடிகள் 69 பகுதிகளில் (பள்ளிகளில்) அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான மின் இணைப்பு, தண்ணீா் வசதி, சாய்வுதள வசதி, கழிப்பறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என மண்டல அலுவலா்கள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் பொறியாளா்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் தெற்குத் தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள 33 மண்டல அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகளை முழுமையாக அகற்றப்பட்டதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வழிகளுக்கு மாற்று வழிகளை தெரிந்திருத்தல் வேண்டும்.
மண்டல அலுவா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் குறித்து முழுமையாக கற்றறிந்து, திறனை மேம்படுத்திக் கொள்வதோடு, எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காதவாறு தோ்தல் பணியாற்ற வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்களது கடமையினை உணா்ந்து தோ்தல் நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா்.
பயிற்சியை மாநகரப் பொறியாளா் அ. அசோகன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பி.ரமேஷ்பாபு, வி.வள்ளிதேவி, தோ்தல் துணை வட்டாசியா் உ. ஜாஸ்மின் பெனாசிா், உதவி ஆணையா் டி. சண்முகவடிவேல், செயற்பொறியாளா்கள் பழனிசாமி, லலிதா ஆகியோா் வழங்கினா்.