கொட்டவாடியில் மயானக்கொள்ளை திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
வாழப்பாடி அடுத்த கொட்டவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ‘ரத்தச்சோறு’ எடுக்கும் வினோத மயானக்கொள்ளை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அடுத்த கொட்டவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ‘ரத்தச்சோறு’ எடுக்கும் வினோத மயானக்கொள்ளை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கொட்டவாடி கிராமத்தில் ஆண்டு தோறும் தமிழ் மாதமான மாசி இறுதி வாரத்தில் ‘ரத்தச்சோறு’ எடுக்கும் வினோத மயானக்கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. வசிஷ்டநதிக்கரையில் அமைந்துள்ள மயானத்தில் மண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ள ‘பெரியாண்டிச்சி’ பெண் காவல் தெய்வத்தை வழிபடும் விதத்தில் கொண்டாடப்படும் இத்திருவிழா சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தி பெற்றதாகும்.
இவ்வினோத திருவிழாவில் காட்டேறி வேடமிடும் பூசாரிகள், பெண்கள் தலையில் முறத்தால் அடித்து ‘பேய்’ விரட்டுவதும், பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக மயானத்தில் வீசும் ஆட்டுக்குட்டிகளை பூசாரிகள் கடித்து ரத்தம் குடிக்கும் வினோதமும் இன்றளவும் பழமை மாறாமல் தொடர்ந்து வருகிறது.
ஆட்டுக்குட்டிகளின் பச்சை ரத்தத்தில், பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கலிட்ட சோற்றில் பிணைந்து மயானத்தில் கொடுக்கப்படும் ‘ரத்தச்சோறு’ சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் ஏற்படுமென கொட்டவாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மயானத்தில் ரத்தச்சோறு எடுப்பதற்கு பக்தர்கள் முண்டியடித்து கொள்வதால் இந்த வினோத விழா மயானக்கொள்ளை திருவிழா என பெயர் பெற்றது.
நிகழாண்டு சனிக்கிழமை மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி கொட்டவாடி கிராமத்திலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது. உற்சமூர்த்திகளை புஷ்ப பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து சென்ற பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
வசிஷ்டநதியின் மேற்குகரையில் அமைந்துள்ள மயானத்தில், சனிக்கிழமை மாலை கொட்டவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.
வழக்கம் போல் ஆட்டுக்குட்டியின் ரத்தத்தில் அம்மனுக்கு படைக்கப்பட்ட பொங்கலை பிசைந்து ‘ரத்தச்சோறு’ தயாரித்து மயானத்தின் மையத்தில் தயாராக வைக்கப்பட்டது. வசிஷ்டநதியில் புனித நீராடி வந்த பூசாரிகள் மயானத்திற்குள் நுழைந்து ரத்தச்சோற்றை அள்ளி பக்தர்களுக்கு வழங்கினர்.