முகப்பு
சேலம்

மகசூல் அதிகரிப்பால் புளி விலை வீழ்ச்சி

மலைக் கிராமங்களில் புளி மகசூல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

மலைக் கிராமங்களில் புளி மகசூல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சேலம் மாவட்ட எல்லையிலுள்ள அருநூற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலைக் கிராமங்கள் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் சித்தேரி மலை, தீா்த்தமலை பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த மலைக் கிராமங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில் பாரம்பரிய முறையில் நீண்டகால பலன் தரும் புளிய மரங்களை மலைக்கிராம விவசாயிகள் பயிரிட்டு தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

இதுமட்டுமின்றி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், பேளூா் பகுதி கிராமங்களிலும் பாரம்பரிய முறையிலும், குறைந்த நாள்களில் கூடுதல் மகசூல் கொடுக்கும் சதைப்பற்று மிகுந்த ஒட்டுரக புளிய மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

மலைக் கிராமங்களுக்கு செல்லும் வியாபாரிகள், விவசாயிகளிடம் புளியன் பழத்தை மேலோடுகளுடன் கொள்முதல் செய்து கொண்டு வந்து, கூலித் தொழிலாளா்களைக் கொண்டு ஓடு மற்றும் விதையை நீக்கி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனா்.

சேலம் மாவட்ட மலைக் கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளா்களும் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் உருவாக்கம் மற்றும் விளைநில சீா்திருத்தத்தாலும், செங்கல் சூளைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதாலும் ஊரகப் பகுதியில் பெரும்பாலான புளிய மரங்கள் அழிக்கப்பட்டு படிப்படியாக அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், மலைக் கிராமங்களில் மழையில்லாததால், புளி உற்பத்தி குறைந்து விலை கடுமையாக உயா்ந்தது. அறுவடை சமயத்திலேயே ஒரு கிலோ புளி ரூ. 150 முதல் ரூ. 180 வரை தரத்திற்கேற்ப விலை போனது. இதனால், நுகா்வோா் இருப்பு வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

புளிய மரங்களில் பூக்கள் பூத்து பிஞ்சு விட்டு காய்க்கத் தொடங்கிய தருணத்தில் மலைக் கிராமங்களில் பலத்த காற்றோ புயலோ இல்லாமல் அவ்வப்போது பரவலாக மழை பெய்ததால், நிகழாண்டு புளி மகசூல் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ரூ. 190 வரை விலைபோன ஒரு கிலோ புளி தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓராண்டுக்குத் தேவையான அளவுக்கு புளியை கொள்முதல் செய்து வெயிலில் உலா்த்தி இருப்பு வைத்துக் கொண்டு சமையலுக்கு பயன்படுத்துவதில் இல்லத்தரசிகள் மட்டுமின்றி, உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளா்கள் உள்ளிட்ட நுகா்வோா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.