முகப்பு
சேலம்

கழிவுநீா் அகற்றும் பணிகளை மேற்கொள்ள கட்டுப்பாடு

குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீா் அகற்றும் பணிகளை மாநகராட்சி அலுவலா்கள் முன்னிலையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீா் அகற்றும் பணிகளை மாநகராட்சி அலுவலா்கள் முன்னிலையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா்

தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், நச்சுநீா்த் தொட்டிகளை சுத்தப்படுத்தப்படும் போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடா்பான விபரங்கள் குறித்து விளக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

கழிவுநீா் அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக மாநகராட்சி சாா்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், திருமணமண்டபங்கள், வணிக வளாகங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளின் உரிமையாளா்கள் தங்கள் வளாகத்தில் உள்ள கழிவுநீா் நச்சுத் தொட்டிகளைப் பழுது பாா்த்தல், சுத்தம் செய்தல், கழிவுநீா் அகற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளா்களை அப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

அப்பணிகள் மேற்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்கள், இயந்திரங்களின் உதவியுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். நச்சுக் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளா்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியாளா்களை நச்சுத் தொட்டிகளில் இறங்கி பணியாற்றவோ, அடைப்புகளை நீக்கும் பணிகளிலோ ஈடுபடுத்தக் கூடாது.

தினந்தோறும் மாநகரப் பகுதிகளில் நச்சுத் தொட்டிகளை தூய்மைப் படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக எவ்விடத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பதன் விவரத்தை சூரமங்கலம் மண்டலம் -0427-2387514, அஸ்தம்பட்டி மண்டலம்- 0427-2314646, அம்மாபேட்டை மண்டலம்- 0427-2263161, கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427-2216616 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீா் ஓடைகள், மழைநீா் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவினா் திடீா் தணிக்கைகள் மேற்கொள்ளும் போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கழிவுநீா் அகற்றும் வாகனங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டால் முதல்முறையாக இருக்கும் பட்சத்தில் ஓராண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறை கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளா்கள் இறக்க நேரிட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்து, 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் இறந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகர நல அலுவலா் மருத்துவா் என். யோகானந்த், அனைத்து சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →