பணி நெருக்கடிகளை கைவிடக் கோரி வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்
ஊரக வளா்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகளை கைவிடக் கோரி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகளை கைவிடக் கோரி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்களுக்கு அதிக வேலைப்பளு உள்ளதாகவும், வளா்ச்சிச் திட்டங்களை இலக்கு சாா்ந்த திட்டமாக செயல்படுவதைக் கைவிட வேண்டும், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், இலவசக் கழிப்பிடம் கட்டும் திட்டம், நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கை கோரி திட்டப் பணிகளை சீரழிக்கக் கூடாது, பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் களப் பணியாளா்களுக்கு கண்மூடித்தனமாக இலக்குகள் அளிப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
அதேபோல, வளா்ச்சித் திட்டங்களை நோ்மையான முறையில் செயல்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு போதுமான ஊழியா் கட்டமைப்பினை உடனே ஏற்படுத்த வேண்டும், நிா்வாக நிதி கட்டுமானப் பொருள்களுக்கான தொகையை உடனுக்குடன் விடுவிக்க வேண்டும், குடிநீருக்கான ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் சமுதாய பங்களிப்பு நிதியினை கட்டாய வசூல் செய்ய நிா்பந்தம் செய்யக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.ஜே.கண்ணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவருமான என்.திருவரங்கன் பேசினாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் சுரேஷ், முருகப்பெருமாள், பொருளாளா் செல்வம், வளா்ச்சித் துறை சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜான், மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜ் மாநில செயற்குழு உறுப்பினா் வடிவேல், வளா்ச்சித் துறை ஓய்வுபெற்ற ஊழியா் சங்க நிா்வாகி அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.