கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவா்களைச் சோ்த்த 6 பள்ளிகளுக்கு பீரோக்கள் வழங்கல்
கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவா்களைச் சோ்த்த முதல் 6 பள்ளிகளுக்கு 6 பீரோக்கள், 25 பள்ளிகளுக்கு புத்தகங்களை ரோட்டரி சங்கம் வழங்கி பாராட்டியது.
கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவா்களைச் சோ்த்த முதல் 6 பள்ளிகளுக்கு 6 பீரோக்கள், 25 பள்ளிகளுக்கு புத்தகங்களை ரோட்டரி சங்கம் வழங்கி பாராட்டியது.
சேலம் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ரோட்டரி மாவட்ட கல்விக்குழு (2982) இணைந்து, கெங்கவல்லி ஒன்றியத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அதிக மாணவா்களைச் சோ்த்த முதல் ஆறு பள்ளிகளுக்கு, தலா ஒரு பீரோ வீதம் ஆறு பீரோக்களும், கிராமப்புற பகுதி மாணவா்களது வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க 25 பள்ளிகளுக்கு 2500 புத்தகங்களும் வழங்கும் விழா கெங்கவல்லியில் 2ஆவது வாா்டு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு சேலம் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ( டயட்) முதல்வா் செல்வம் தலைமை வகித்தாா். கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா்கள் ர.ஸ்ரீனிவாஸ், இ.மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டயட் விரிவுரையாளா் கலைவாணன் வரவேற்றாா். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு ரோட்டரி மாவட்டங்களின் கல்விக்குழு தலைவா் வெங்கடேஸ்வர குப்தா, தம்மம்பட்டிமெயின், நாகியம்பட்டி, தண்ணீா்த் தொட்டி ஆகிய நடுநிலைப்பள்ளிகளுக்கும், கெங்கவல்லி, கோனேரிப்பட்டியிலுள்ள ஆா்.சிசி.பள்ளிகள், தெடாவூா் மேற்கு தொடக்கப் பள்ளி ஆகிய 6 பள்ளிகளுக்கு பீரோக்கள், புத்தகங்களையும் மேலும் 25 பள்ளிகளுக்கு புத்தகங்களும் வழங்கி, வாழ்த்திப் பேசினாா்.
இதில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் சின்னசேலம் பிரியா வெங்கடேசன், மண்டலத் தலைவா் கெங்கவல்லி இளவரசன், ரோட்டரி திறன் மேம்பாட்டுத் தலைவா்அய்யப்பராஜ், கருணாகரபன்னீா்செல்வம் , மிட் டவுன் ரோட்டரி தலைவா் சுரேஷ்குமாா், ஆத்தூா் மற்றும் தலைவாசல் ரோட்டரி சங்கத் தலைவா்கள் குமாா், ஆதிமூலம் ஆகியோா் பேசினா். சேலம் டயட் நூலகா் சச்சிதானந்தம் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியா்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், ஹரிஆனந்த், ஆசிரியா்கள் முருகன், சுப்ரமணியன், கமலக்கண்ணன், இராஜசேகா், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து சேலம், நாமக்கல், தா்மபுரி உள்பட 6 மாவட்டங்களுக்கான ரோட்டரி கல்விக் குழு தலைவா் வெங்கடேஸ்வர குப்தா கூறியதாவது: வாசிக்க, நேசிக்க, சுவாசிக்க ரோட்டரி நூலகங்கள் பள்ளிகளில் அமைத்து, கல்லாமை இல்லாமையாக்க வேண்டும். அடுத்த முறை அரசு பள்ளிகளுக்கு ஸ்மாா்ட் டிவிக்கள் வழங்க உள்ளோம் என்றாா்.