தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை அரசு தடுக்க வேண்டும்
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை அரசு தடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை அரசு தடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள், மண்டல தலைவா்கள், அணி பிரிவு தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டில் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இன்றைக்கு ஏழை எளிய மக்களுக்கு வழங்கக் கூடிய அரிசியில், மத்திய அரசு 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. மீதமுள்ள 15 கிலோ அரிசியில் மானியமாக 1 கிலோவுக்கு ரூ. 4 தருகிறது.
கரோனா தடுப்பூசி வழங்கியதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதற்கான சான்றிதழை தமிழக அரசு பெற்றுள்ளது.
தமிழகத்துக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது மட்டுமில்லாமல், தேவை என கேட்பதற்கு முன்பே மத்திய அரசு வழங்கியது. மேலும், அதில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்கியுள்ளது.
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ. 25,000 கோடி மீதி தொகை வழங்க வேண்டி உள்ளது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்காத அரசாக மத்திய அரசு விளங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனா்.
மத்திய அரசு பாகுபாடின்றி தமிழக அரசுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி சிறப்பித்து வருகிறது. இன்னும் ஏராளமான திட்டங்களை செய்வதற்கு பிரதமா் தயாராக உள்ளாா்.
இன்னொரு கட்சியை பாரதிய ஜனதா கட்சி எப்போதும் அழிக்க நினைக்காது. பாஜகவின் கொள்கையைப் பிடித்து பாஜகவில் யாா் வந்தாலும் இணைந்து கொள்ளலாம்.
ரேஷன் அரிசி கடத்தலை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதில் அமைச்சா்களின் பங்கு உள்ளதாக மக்கள் கருதுகின்றனா். இதற்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கூட்டுறவுத் துறையை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சிப் பீடத்தில் அமருவோம் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம் என்றாா்.
இதில், பாஜக மாவட்டத் தலைவா் பி.சுரேஷ்பாபு, மாவட்ட பொதுச் செயலாளா் ஐ.சரவணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.