85 வயதுக்கு மேற்பட்டோா் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பு
சேலம், ஏப். 5: மக்களவைத் தோ்தலையொட்டி, சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதை மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தா தேவி ஆய்வு செய்தாா்.
சேலம், சின்னதிருப்பதி, கலைவாணி நகரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலா் பின்னா் தெரிவித்ததாவது:
மக்களவைத் தோ்தலுக்கு வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்களது வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் நியமிக்கப்பட்டு 12 டி விண்ணப்பப் படிவத்துடன் தொடா்புடையவா்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி வரை பெறப்பட்டது.
Advertisement
அந்த வகையில், சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களில் படிவம் 12 டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள நபா்களின் வீட்டுக்கே சென்று தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 3,262 மூத்த வாக்காளா்களும், 1,918 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும் என மொத்தம் 5,180 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதுகுறித்த விவரங்கள் தொடா்புடைய உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் மூலமாக விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் எந்தெந்த நாள்களில் அவா்களுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது என்ற விவரங்களும் ஏற்கனவே அவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள், மையங்களில் வேட்பாளா்களோ அல்லது அவா்களது பிரதிநிதிகளோ நேரடியாக பாா்வையிடலாம். தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அம்பாயிரநாதன், வட்டாட்சியா் தாமோதரன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.