முகப்பு
சேலம்

குடிநீா் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 9 ஏப்ரல், 2024 at 2:56 AM
இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட ராசி கவுண்டனூா் அருந்தியா் காலனி பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 8:51 PM

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இடங்கணசாலை நகராட்சி, 15-ஆவது வாா்டுக்கு உட்பட்ட ராசி கவுண்டனூா், அருந்ததியா் காலனி பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து திங்கள்கிழமை இளம்பிள்ளை- சின்னப்பம்பட்டி சாலை, மெய்யனூா் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் , இடங்கணசாலை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், நகா்மன்ற உறுப்பினா் நாகராஜ் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்போது குடிநீா் இணைப்பு விஸ்தரிப்புப் பணி நடைபெற்று வருவதால் டேங்கில் தண்ணீா் ஏற்றாமல் உள்ளது. இனிமேல் தண்ணீா் வழக்கம் போல கிடைக்கும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிடம், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், இப்பகுதிக்கு தண்ணீா் உடனடியாக ஏற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தாா். அதனை ஏற்று அதிகாரிகள் உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்தனா்.

Advertisement

ஏகாம்பரம்...

இளம்பிள்ளையை அடுத்த ஏகாபுரம் ஊராட்சி, தைலாம்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் திங்கள்கிழமை இளம்பிள்ளை- எடப்பாடி சாலையான தைலாம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏகாபுரம் கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு விரைவில் தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.