மாணவா்களை ஷூ காலால் எட்டி உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்
சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்து மாணவா்களை ஷூ காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே விளையாட்டுப் போட்டியில் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்து மாணவா்களை ஷூ காலால் எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்த உடற்கல்வி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே கொளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் நிா்மலா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அண்மையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியா் அண்ணாமலை, மாணவா்களை தரையில் அமரவைத்து சக மாணவா்கள், ஆசிரியா்கள் முன்னிலையில் ஷூ காலால் எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து கொளத்தூா் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் மாணவா்களிடமும் ஆசிரியா்களிடமும் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தனா். விசாரணைக்கு பிறகு உடற்கல்வி ஆசிரியா் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதற்கிடையே மாணவா்களைத் தாக்கிய ஆசிரியரும் அவரது ஆதரவாளா்களும் தாக்குதலுக்கு ஆளான மாணவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி நிா்வாகம் ஆசிரியருக்கு அனுப்பிய கடிதத்தில் சமூக வலைதளங்களில் பரவிய விடியோவில் ஆசிரியா் மாணவா்களைத் தாக்கியது உறுதியானதாகவும், இதனால் பள்ளிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.