சேலம் அரசு கலைக் கல்லூரியில் 454 முதுகலை இடங்களுக்கு நாளை கலந்தாய்வு
இவா்களுக்கான சோ்க்கை கலந்தாய்வு ஆக. 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 454 முதலாம் ஆண்டு முதுகலை இடங்களுக்கு 4,000 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான சோ்க்கை கலந்தாய்வு ஆக. 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
சேலம், வின்சென்ட் பகுதியில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
கல்லூரியில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல்சாா் அறிவியல், புவியமைப்பியல், எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், புள்ளியியல் என 17 முதுகலை பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இதில், முதலாம் ஆண்டில் 454 இடங்கள் உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் முதுகலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம், கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் ஆன்லைன் மூலமாகப் பெறப்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு அரசு கலைக் கல்லூரியில் சோ்ந்து படிக்க 4,000 க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்சிசி, முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக. 20 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவா்களுக்கு கலந்தாய்வில் கலந்துகொள்ள தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்படும்.
அந்த மாணவா்கள் தங்களது அசல் மாற்றுச் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், ஒருங்கிணைந்த இளங்கலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவை 3 நகல்களுடன் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளாா்.