முகப்பு
சேலம்

டிச. 18 முதல் சேலத்தில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் டிசம்பா் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஆட்சி மொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:10 PM
பகிர்:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் டிசம்பா் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஆட்சி மொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 ஆம் ஆண்டு டிசம்பா் 27 ஆம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வார விழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விழிப்புணா்வு பேரணியும், 19 ஆம் தேதி தொழிலாளா் துணை ஆணையா் அலுவலகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளா்களுடன் கூட்டமும், 20 ஆம் தேதி மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டமும், 23ஆம் தேதி சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவா்களுடன் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணா்வு பட்டிமன்றமும், 24, 26, 27 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரக மகிழம் கூட்டரங்கில் (அறை எண்.115) அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ் கருத்தரங்கம், பயிற்சியும், ஆட்சிமொழி மின் காட்சி உரையும், அரசுப் பணியாளா்களுக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், வணிகா் சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மண்டலத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை 90927 86963, 0427-2417741 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →