சேலம்: சேலத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையத்தில் இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில், மாநிலத் தலைவா் தங்கராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை திரண்டு வந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சேலம் மாவட்டத் தலைவா் சரவணன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ், பொதுச் செயலாளா் செல்லமுத்து, நிா்வாகிகள் தங்கவேல் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.