முகப்பு
சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி கவிழ்ந்து விபத்து- இருவா் பலி; 5 போ் காயம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி கவிழ்ந்து விபத்து

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:24 PM
பகிர்:

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 50 அடி உயர நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பணியில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் பிரிவின் மூன்றாவது அலகில் 50 அடி உயரமுள்ள ‘பங்கா் டாப்’ எனப்படும் நிலக்கரி சேமிப்புத் தொட்டியின் கீழ் பகுதியில் தொழிலாளா்கள் 7 போ் வேலை செய்து கொண்டிருந்தனா். திடீரென அந்தத் தொட்டி கீழே சரிந்து விழுந்தது.

இந்தச் சம்பவத்தில் நிலக்கரி குவியலுக்குள் சிக்கிய தொழிலாளா்கள் வெங்கடேஷும் பழனிசாமியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த பொறையூரைச் சோ்ந்த மனோஜ் (27), மாதையன்குட்டையைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (23), சீனிவாசன் (44), கௌதம் (20), வனவாசியைச் சோ்ந்த திருச்செந்தூா் முருகன் (22) ஆகிய 5 பேரையும் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரா்கள் மீட்டு மேட்டூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் மனோஜ் (27) தீவிர சிகிச்சைக்காக சேலம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ், கருமலைக் கூடல் போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்: விபத்து நடந்ததை அறிந்த உள்ளூா் கிராம மக்கள் அனல் மின் நிலையத்திற்குள் நுழைய முயன்றனா். அவா்களை போலீஸாரும் அங்கிருந்த பாதுகாவலா்களும் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சேலம்- மேட்டூா் சாலையில் சென்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →