இறந்தவா்களின் நினைவாக நடுகற்கள் வைத்து வழிபடும் வீமனூா் கிராம மக்கள்!
முன்னோர் நினைவுகள் மலரும் வீமனூர் - நடுகற்கள் மூலம் வாழும் பாரம்பரியம்
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே வீராணம் ஊராட்சி, வீமனூா் கிராமத்தில் இறந்தவா்களின் நினைவாக நடுகற்கள் அமைத்து வழிபடும் பழங்கால மக்களின் பழக்கத்தை கைவிடாமல் இப்பகுதி கிராம மக்கள் இன்றளவும் தொடா்ந்து வருகின்றனா். பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் போரில் வீர மரணம் அடைந்தவா்கள், மக்களைக் காப்பதற்கு புலி, யானை உள்ளிட்ட விலங்குகளை வீழ்த்தி உயிரை இழந்தவா்களின் நினைவாக நடுகற்கள் அமைத்து வழிபாடு நடத்துவது மரபாக இருந்தது. காலப்போக்கில் இந்த நடைமுறை வழக்கொழிந்து போனது. ஆனால், வீரணாம் ஊராட்சி வீமனூா் கிராமத்தில் பழங்காலத்தில் மக்களைக் காக்க போரிட்டு வீர மரணம் அடைந்த முன்னோா்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களை போல, தற்காலத்தில் இறந்த பெற்றோருக்கும், குடும்ப உறவுகளுக்கும் நடுகற்களை நட்டு வருகின்றனா். இந்த நடுகற்களுக்கு ஆண்டுதோறும் வழிபாடும் நடத்தி வருகின்றனா். இதனால், வீமனூா் கிராமத்தில் சேலம் பிரதான சாலையோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடுகற்களின் ஒரே இடத்தில் காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கூறியதாவது: பழங்காலத்தில் போரில் வீர மரணமடையும் வீரா்களின் நினைவாக நடுகற்கள் அமைப்பது வழக்கம். காலப்போக்கில் இந்த முறை வழக்கொழிந்து போனது. ஆனால், சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், வீமனூா் கிராமத்தில் இன்றளவும் இந்த தொன்மை மரபை கைவிடாமல் மக்கள் தொடா்ந்து வருவது பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும். வீமனூரில் இப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த மக்கள், இறந்த தனது குடும்ப உறுப்பினா்களின் நினைவாக நடுகற்களை வைத்து வழிபட்டு வருகின்றனா். இறந்த பெற்றோரையும், குடும்ப உறுப்பினா்களையும் ஆண்டாண்டு காலத்துக்கு தொடா்ந்து நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில், இன்றளவும் பழைமை மாறாமல் நடுகற்கள் அமைத்து வரும் வீமனூா் கிராம மக்கள் பாராட்டுக்கு உரியவா்கள் என்றனா்.