சேலம் சந்தைகளுக்கு மேச்சேரி, மேட்டூா், எடப்பாடி, ஆத்தூா், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஒசூா், ஒட்டன்சத்திரம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில், சேலம் சந்தைகளில் கடந்த வாரம் கிலோ ரூ. 40-க்கு விற்ற தக்காளி கிடுகிடுவென விலை உயா்ந்து தற்போது ஒரு கிலோ ரூ. 90-க்கு விற்பனையாகிறது. இதனால் தேவையை விட குறைந்த அளவே பொதுமக்கள் தக்காளியை வாங்கிச் செல்கின்றனா். இந்த திடீா் விலை உயா்வால் இல்லத்தரசிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
விலை உயா்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள கா்நாடக மாநிலம், பெங்களூரு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தக்காளிச் செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. இனி வரும் நாள்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என்பதால், விலை குறைய வாய்ப்பில்லை என தெரிவித்தனா்.