சிறுபான்மையின ஆணையக் குழு இன்று சேலம் வருகை
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனா்.
சேலம்: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் டாக்டா் எம்.எம்.அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனா். சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள், சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியவும் உள்ளனா். சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சாா்ந்த பொது மக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறினாா்.